ஜிஎஸ்டி சீர்திருத்த விவகாரத்தில் அதிகப்படியான வரிகள் காரணமாக ஏழை மற்றும் எளிய மக்கள் துன்புற்றுள்ளதாக மத்திய அரசு ஒப்புக்கொள்கிறதா என த.வெ.க. தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.
விஜய் வெளியிட்ட அறிக்கையில், நீண்ட நாட்களுக்கு பிறகு பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவி சாய்த்து இருப்பது வரவேற்கத்தக்கது என்றும், வரி இல்லாமல் எந்த அரசும் ஆட்சி செய்ய முடியாது என அவர் தெரிவித்தார். ஆனால் வரி வசூல் எந்த தரப்பிலிருந்து செய்யப்படுவதாகும் – கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து, அல்லது சாதாரண மக்களிடமிருந்து – என்பதே முக்கியமான கேள்வி எனவும் விஜய் கூறியுள்ளார்.
அதிகரித்த ஜிஎஸ்டி வரியை குறைத்து, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கிய வரிச் சலுகையை மாற்றி, மக்களுக்கு நிகரான சலுகை வழங்கினால் பொருளாதாரம் மீட்கப்பட்டிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அனைத்து தரப்பினருக்கும் பயன்படும் வகையில் பெட்ரோல், டீசல் விலை குறைத்து அதை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர அரசு ஆலோசிக்க வேண்டும் என்றும், மத்திய மற்றும் மாநில நிதி பகிர்வில் சீர்திருத்தம் கொண்டு மாநில வருவாயைப் பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
