சென்னை :
திமுகவில் முக்கிய பொறுப்புகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. முன்னாள் அமைச்சர் க. பொன்முடி மற்றும் மாநில அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ஆகியோர் திமுகவின் புதிய துணைப் பொதுச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே திமுகவில் ஐந்து துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ. பெரியசாமி, திருச்சி சிவா, ஆ. ராசா, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி பணியாற்றி வந்த நிலையில், தற்போது மேலும் இரண்டு பேர் சேர்க்கப்பட்டுள்ளதால் மொத்தம் ஏழு பேர் அந்தப் பொறுப்பில் உள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் க. பொன்முடியிடம் இருந்து அந்தப் பொறுப்பு நீக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் அவருக்கு அதே பதவி வழங்கப்பட்டிருப்பது முக்கியமான மாற்றமாக கருதப்படுகிறது.
இதனுடன், திமுக பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
திருப்பூர் கிழக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக இருந்த மு.பெ. சாமிநாதன், துணைப் பொதுச் செயலாளராக உயர்த்தப்பட்டதால்,
அவருக்குப் பதிலாக இல. பத்மநாபன் திருப்பூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், பத்மநாபனின் முன்னைய பதவியான திருப்பூர் தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் பொறுப்பில் எம்.பி. கே. ஈஸ்வரசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
அதே நேரத்தில், திமுக அமைப்பு வலுப்படுத்தும் நோக்கில் வேலூர் மாவட்டம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது — வேலூர் வடக்கு மற்றும் வேலூர் தெற்கு.
வேலூர் அணைக்கட்டு மற்றும் குடியாத்தம் தொகுதிகள் “வேலூர் தெற்கு” எனப் பெயரிடப்பட்டு, இதற்கு எம்.எல்.ஏ. ஏ.பி. நந்தகுமார் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
காட்பாடி மற்றும் கீழ்வைத்தியணான்குப்பம் தொகுதிகள் “வேலூர் வடக்கு” என வகுக்கப்பட்டு, இதற்கான பொறுப்பை எம்.பி. டி.எம். கதிர்ஆனந்த் ஏற்கிறார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், இந்த புதிய நியமனங்கள் திமுகவின் உள்கட்சித் தயாரிப்பை வலுப்படுத்தும் நடவடிக்கையாகக் கருதப்படுகின்றன.

















