சென்னை :
முதல்வர் மு.க. ஸ்டாலின், “அரசியல் என்பது மக்கள் பணி. அது ஒரு கடின உழைப்பு. எங்களைப் பொறுத்தவரை இங்கு சொகுசுக்கு இடமில்லை” என்று தெரிவித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் “அன்புக் கரங்கள்” திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.
பின்னர் பேசிய அவர், “இந்தத் திட்டம் மூலம் இனிமேல் குழந்தைகள் கவலைப்பட வேண்டாம். நான் இருக்கிறேன், உங்களை பாதுகாப்பாக கவனித்துக் கொள்வேன். இன்று அண்ணாதுரை பிறந்த நாள் என்பதால், மக்களின் நலனை முன்னிறுத்தும் திராவிட இயக்கத்தின் இலட்சியத்தை நினைவுகூர்ந்து இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது” என்றார்.
அவர் தொடர்ந்து, “மக்களுடன் மக்களாக இருப்பதே எங்கள் அரசியலின் அடிப்படை. காலை ஒரு பகுதியில் மக்களுடன் இருந்தால், மாலை இன்னொரு பகுதியில் மக்களுடன் இருப்பேன். இந்த உழைப்பை கருணாநிதி, அண்ணாதுரை, பெரியார் போன்ற முன்னோர்கள் எங்களுக்கு கற்றுக் கொடுத்தவர்கள். அரசியல் என்றால் அதிகாரத்தில் அமர்ந்து சொகுசில் வாழ்வது அல்ல. சாமானியனின் நலனுக்காக போராடுவதே எங்கள் நோக்கம்” என வலியுறுத்தினார்.
காலை உணவு திட்டம், கொரோனா காலத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவித்தொகை போன்ற பல திட்டங்களை எடுத்துக்காட்டிய அவர்,
“இவை வாக்கு அரசியலுக்காக தொடங்கப்பட்டவை அல்ல. மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கான எங்கள் கொள்கை, செயல்திட்டங்களின் மூலம் வெளிப்படுகிறது. வாக்கு என்பது மக்கள் நம்பிக்கையைச் சுட்டிக்காட்டும் அடையாளம் மட்டுமே” என்று கூறினார்.