ஈரோடு பெருந்துறையில் நடைபெற்ற மக்கள் சந்திப்புக் கூட்டத்தில், தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய், திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார். “திமுக ஒரு தீயசக்தி; தவெக ஒரு தூயசக்தி. இங்கே அரசியல் போட்டி என்பது தீயசக்திக்கும் தூயசக்திக்கும் இடையிலான போராட்டம்தான்” என அவர் தெரிவித்தார்.
கூட்டத்தில் பேசிய விஜய், ஈரோடு மண்ணின் சிறப்புகளை நினைவுகூர்ந்தார். “மஞ்சள் என்பது மங்களகரமான ஒன்று. நல்ல காரியம் தொடங்கும்போது மஞ்சளோடு தான் தொடங்குவோம். வீட்டில் அம்மா, அக்கா, தங்கைகள் நம்ம நலனுக்காக மஞ்சள் கட்டி வேண்டுகிறார்கள். அந்த மஞ்சள் விளையும் பூமிதான் ஈரோடு. விவசாயத்திற்கு பெயர் பெற்ற மண் இது” என அவர் குறிப்பிட்டார்.
மக்களின் ஆதரவை நம்பித்தான் அரசியலுக்கு வந்ததாக கூறிய விஜய், “என்னை மக்கள் ஒருபோதும் கைவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கையே எனக்கு பெரிய தைரியம். தவெக தொண்டர்கள் எனக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் இருப்பேன்” என்றார்.
அத்திக்கடவு–அவிநாசி திட்டம் குறித்து பேசிய அவர், “இந்த மண் இன்னும் வறட்சியில் இருக்கிறது. திட்டத்தை விரிவுபடுத்த வேண்டிய இடத்தில், அதை செய்யாமல் கண்காட்சி நடத்திக்கொண்டிருக்கிறார்கள்” என ஆட்சியாளர்களை விமர்சித்தார்.
அண்ணா, எம்.ஜி.ஆர். குறித்து பேசிய விஜய், “அண்ணாவும், எம்.ஜி.ஆரும் தமிழ்நாட்டின் சொத்து. அவர்களை பயன்படுத்துவதைப் பற்றி யாரும் குற்றம் சொல்லக் கூடாது. நாங்கள் எங்கள் வழியில் அரசியல் செய்கிறோம்” என்றார்.
எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதிலளித்த அவர், “எனக்கு பயம் இல்லை என்று கத்திக்கொண்டே பயந்து போகும் சிறுவன் மாதிரி சிலர் பேசுகிறார்கள். முதலில் மண்டைமேல் இருக்கும் கொண்டையை மறையுங்கள்” என கடுமையாக பேசினார்.
மேலும், “பெரியார் பெயரை மட்டும் சொல்லி கொள்ளையடிக்க வேண்டாம். களத்தில் இல்லாதவர்களையும், சம்பந்தமே இல்லாதவர்களையும் எதிர்க்க எங்களுக்கு நேரம் இல்லை. எங்களுக்கு நிறைய வேலை இருக்கிறது” என விஜய் தெரிவித்தார்.
தன்னை அரசியல் பேசவில்லை என விமர்சிப்பவர்களுக்கு பதிலளித்த அவர்,
“நான் ஏன் எப்போதும் பேச வேண்டும்? அரசியல் என்பது வெறும் பேசுவது மட்டும் இல்லை. பேசத் தெரியும்; உங்களை விட அதிகமாக பேசத் தெரியும். ஆனால் அந்த மாதிரியான அரசியல் பேச வரவில்லை” என்றார்.
பெண்கள் பாதுகாப்பு மற்றும் சட்டம்–ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்பிய விஜய், “பெண்களுக்கு உண்மையிலேயே பாதுகாப்பு இருக்கிறதா?” என கூட்டத்திடம் கேள்வி எழுப்பினார். அதற்கு தொண்டர்கள் ‘இல்லை’ என பதிலளித்தனர்.
திமுக மீதான தனது விமர்சனத்தை வலுப்படுத்திய அவர், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூட திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார். அப்போது ஏன் என்று யோசித்தேன். இப்போது புரிகிறது. அதனால் நானும் சொல்கிறேன் – திமுக ஒரு தீயசக்தி; தவெக ஒரு தூயசக்தி” என கூறினார்.

















