பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தரப்பு பொதுச் செயலாளர் முரளி சங்கர் இன்று திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் ராமதாஸை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“பொதுக்குழுவை நடத்த அனுமதி தரப்படவோ தடையிடப்படவோ இல்லை. இது அதிகாரப் பிரச்சனையென கூறப்பட்டதால், சிவில் நீதிமன்றத்தில் பார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்தடுத்த நடவடிக்கையை ராமதாஸ் தீர்மானிப்பார்.
அன்புமணி நடத்தும் பொதுக்குழு செல்லாது. மே 28-ஆம் தேதியுடன் அன்புமணியின் பதவிக்காலம் முடிந்துவிட்டது. பொதுக்குழு, நிர்வாகக் குழு, செயற்குழு ஆகியவற்றின் அதிகாரம், நிறுவனரின் வழிகாட்டுதலின்படி, மே 28-க்கு பிறகு மீண்டும் நிறுவனரிடமே திரும்பும். பின்னர் அவர் புதிய நியமனங்களை செய்து, கூட்டங்களை நடத்துவார்.
அன்புமணி நேரடியாக வந்து ராமதாஸிடம் பேசியிருந்தால், இத்தகைய பிரச்சனை ஏற்பட்டிருக்காது. ராமதாஸால் அடையாளம் காணப்பட்டு, பதவி சுகங்களை அனுபவித்த முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அன்புமணியை சந்தித்து நல்ல அறிவுரை வழங்கி, ராமதாஸை நேரில் சந்திக்க ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.
ராமதாஸைவிட பதவி பெரியதல்ல. இட ஒதுக்கீட்டுக்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்த அவருக்கு மரியாதை தரப்பட வேண்டும். ராமதாஸின் முகம், பெயர், உழைப்பும் வழிகாட்டுதலும் இல்லாமல் பொதுக்குழுவை நடத்தியவர்கள் மக்களை எப்படி சந்திப்பார்கள்? தேர்தலை எப்படி எதிர்கொள்வார்கள் என்பதே கேள்வி.
இந்த வழக்கின் தீர்ப்பு நகலைப் பெறுவதில் வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோர் காட்டிய ஆர்வத்தை, கட்சியை வளர்ப்பதில் காட்டியிருந்தால், இன்று 86 வயதிலும் ராமதாஸ் உழைக்க வேண்டிய நிலை இருக்காது” என்று அவர் கூறினார்.