மாமல்லபுரம் : பாமக தலைவர் அன்புமணி தலைமையிலான பொதுக்குழு கூட்டம் இன்று மாமல்லபுரத்தில் தொடங்கியது.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன், கட்சித் தலைவர் அன்புமணி இடையேயான உள்மோதல், நீதிமன்றம் வரை சென்றது. ராமதாஸ், ஆகஸ்ட் 19-ஆம் தேதி பொதுக்குழுவை நடத்துவதாக அறிவித்திருந்தார். அதற்கு மாறாக, அன்புமணி, ஆகஸ்ட் 9-ஆம் தேதி பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதாக அறிவித்தார்.
அன்புமணி கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமதாஸ் தொடர்ந்த வழக்கை, நேற்று சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, திட்டமிட்டபடி இன்று அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.
கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேடையில் ராமதாஸ் புகைப்படம் இடம்பெற்றிருந்ததுடன், அவருக்காக ஒரு காலியிருப்பும் வைக்கப்பட்டிருந்தது.
இந்த கூட்டத்தில், தேர்தல் ஆணைய அங்கீகாரம், சட்டசபை தேர்தல் கூட்டணி மற்றும் களப்பணிகள் குறித்தும் நிர்வாகிகளுடன் அன்புமணி ஆலோசனை நடத்துவார் என தகவல்.
2022 மே மாதத்தில் பாமக தலைவராக தேர்வான அன்புமணியின் பதவிக்காலம் கடந்த மே 28-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. எனவே, மீண்டும் அன்புமணியை தலைவராக தேர்வு செய்து, அதற்கான முறைப்படி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாமக கட்சி தொடங்கியதிலிருந்து, ராமதாஸ் இல்லாமல் நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.