பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குத் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு ஐயப்ப பக்தர்களும், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் பாதயாத்திரை பக்தர்களின் வருகையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவ்வாறு கோவை சாலை வழியாகப் பழநிக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள், தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தும் முன்பாகப் புனிதமான சண்முக நதியில் நீராடிவிட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால், தற்போது பக்தர்களின் முக்கிய நீராடல் துறையாக விளங்கும் சண்முக நதிப் பகுதியில் அமலைச் செடிகள் அடர்த்தியாகப் படர்ந்து, நதியே தெரியாத அளவிற்கு மாசடைந்து காணப்படுவது பக்தர்களிடையே பெரும் கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. புனித நதியாகக் கருதப்படும் சண்முக நதியில் ஒருபுறம் சாக்கடை நீர் கலப்பதும், மறுபுறம் ஆகாயத் தாமரை எனப்படும் அமலைச் செடிகள் நதி முழுவதும் ஆக்கிரமித்துள்ளதாலும் நீரின் தரம் கேள்விக்குறியாகியுள்ளது.
அமலைச் செடிகளின் ஆக்கிரமிப்பால் நீரோட்டம் தடைபட்டுள்ளதோடு, தேங்கி நிற்கும் நீரினால் தோல் நோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாகக் கூறி, பெரும்பாலான பக்தர்கள் நதியில் இறங்கவே தயக்கம் காட்டுகின்றனர். நீண்ட தூரம் பாதயாத்திரையாக வந்து உடல் சோர்வுடன் இருக்கும் பக்தர்கள், இந்தச் சூழலைக் கண்டு மிகுந்த ஏமாற்றத்துடன் குளிப்பதைத் தவிர்த்துவிட்டுச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மற்றும் முருக பக்தர்களின் வருகை உச்சத்தில் இருக்கும் இந்தச் சமயத்தில், புனித நதி இவ்வாறு பராமரிப்பின்றி இருப்பது ஆன்மீக உணர்வைப் புண்படுத்துவதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, பொதுப்பணித்துறையும், கோயில் நிர்வாகமும் ஒருங்கிணைந்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, சண்முக நதியில் படர்ந்துள்ள அமலைச் செடிகளை முழுமையாக அகற்றி, கழிவுநீர் கலப்பதைத் தடுக்க நிரந்தரத் தீர்வு காண வேண்டும் எனப் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

















