தாத்தா காலத்தில் தொடங்கிய அற்ப அரசியலை, பேரன் காலத்திலும் தொடர்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: “திமுகவின் ஊழலும், போலி வேடங்களும் மக்கள் மத்தியில் வெளிப்படும் போதெல்லாம், அதனை மறைக்க பிரிவினையைத் தூண்டும் பழக்கம்தான் திமுகவுக்கு உள்ளது. சமீபத்தில் நகராட்சி நிர்வாகத் துறையில் ரூ.888 கோடி ஊழல் வெளிச்சத்துக்கு வந்ததும், அதனை மறைக்கும் முயற்சியில் முதல்வர் ஸ்டாலின் இறங்கியிருக்கிறார்.
உழைக்கும் பீஹார் மக்களை திமுகவினர் துன்புறுத்துகிறார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியது முழுக்க உண்மையே. தமிழக அமைச்சர்கள் பொன்முடி, டி.ஆர்.பி. ராஜா உள்ளிட்டோர் முதல் திமுகவின் கடைக்கோடி நிர்வாகிகள் வரை, பீஹார் மக்களை ஏளனமாகப் பேசியதும், தாக்குதலுக்குத் தூண்டுவதைப் போல நடந்துகொண்டதும் தமிழக மக்கள் நன்கு அறிந்ததே.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட காணொளியிலேயே பிரதமர் கூறிய வார்த்தைகள் தெளிவாக இருக்கின்றன. ஆனால், திமுகவினர் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டை, தமிழக மக்களை குறிக்கும் வகையில் மடைமாற்றுவது ஸ்டாலினின் பதவிக்கே அவமானம்.
தாத்தா காலத்தில் தொடங்கிய இந்த அற்ப அரசியலை, பேரன் காலத்திலும் தொடர்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்,” என்று அண்ணாமலை தெரிவித்தார்.
