சென்னை: சென்னை கிண்டியில் அமைந்துள்ள கவர்னர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட ரவுடி கருக்கா வினோத்துக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2023 அக்டோபர் 25ஆம் தேதி இரவு, கிண்டி பகுதியில் உள்ள கவர்னர் மாளிகை வளாகத்தில் அடையாளம் தெரியாத நபர் பெட்ரோல் குண்டை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, கிண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு நந்தனம் எஸ்.எம்.நகரைச் சேர்ந்த 42 வயது ரவுடி ‘கருக்கா’ வினோத்தை கைது செய்தனர்.
சம்பவத்தின் பின்னணியில் பயங்கரவாத தொடர்புகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் வழக்கு தேசிய புலனாய்வு முகமை (NIA)க்கு மாற்றப்பட்டது. வினோத்தை காவலில் எடுத்து விசாரித்த என்.ஐ.ஏ., 680 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், சிறப்பு நீதிபதி வினோத்துக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார். அபராதம் செலுத்தத் தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
இந்த தீர்ப்பு, அரசாங்க கட்டிடங்கள் மற்றும் பொது பாதுகாப்பை குறிவைத்து நடக்கும் தாக்குதல்களுக்கு எதிராக கடுமையான எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.
