பழையபாளையம் கிராமத்தில் தனியார் பேருந்து நிர்வாகத்தின் இடையூரால் நிறுத்தப்பட்ட  மினி பேருந்தை இயக்க வலியுறுத்தி மக்கள் மனு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா கொள்ளிடம் அருகே புத்தூரில் இருந்து பழையார் செல்லும் சாலை மார்க்கத்தில் தனியார் மினி பேருந்து இயக்கப்பட்டு வந்த நிலையில் தனியார் பேருந்து நிர்வாகத்தினரின் இடையூறால் மினி பேருந்து சேவை ஒரு வாரமாக நிறுத்தப்பட்டதாக குற்றம் சாட்டி பொதுமக்கள் நடவடிக்கை எடுக்க கோரி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இடம் மனு அளித்தனர். அவர்கள் அளித்த மனுவில் கிராமப் பகுதிகளுக்கு மினி பேருந்துகள் இயக்கும் தமிழக முதல்வரின் திட்டத்தின் அடிப்படையில் பழையபாளையம் கிராமம் வழியாக புத்தூர்-பழையாறு இடையே தனியார் மினி பேருந்து இயக்கப்பட்டு வந்தது. வேலை, வியாபாரம் நிமித்தமாக பழையாறு பகுதிக்குச் செல்லவும், மாணவர்கள் புத்தூர் பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிக்குச் செல்லவும் இப்பேருந்து வசதியாக இருந்தது. ஆனால் கடந்த ஒருவார காலமாக அப்பேருந்து இயக்கப்படவில்லை. அப்பகுதியில் இயக்கப்படும் தனியார் பேருந்து நிர்வாகத்தினரின் இடையூறு காரணமாக மினி பேருந்து இயக்கப்படவில்லை என்றும் தெரிய வருகிறது. எனவே இது குறித்து ஆட்சியர் தலையிட்டு மினி பேருந்தை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version