தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், போடிநாயக்கனூர் தாலுகாவிற்குட்பட்ட அகமலை, ஊரடி, கரும்பாறை, குறவன் குழி உள்ளிட்ட மலை கிராமங்களில் சுமார் 40க்கும் மேற்பட்ட ஆதிவாசி பழங்குடியினக் குடும்பங்கள் பல தலைமுறைகளாக வசித்து வருகின்றனர். இப்பகுதி மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரின் ஒரு பகுதியாக இருப்பதால் அடர்ந்த காடுகள், மலைப் பள்ளத்தாக்குகள் மற்றும் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் காணப்படும் சூழலில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த மலை கிராமங்களுக்கு இதுவரை முறையான சாலை வசதி, தடையற்ற குடிநீர் விநியோகம், நிலையான மின்சாரம், அவசர மருத்துவ சேவை போன்ற அடிப்படை வசதிகள் முழுமையாக கிடைக்கவில்லை என்று மக்கள் தெரிவிக்கின்றனர். சில இடங்களில் அரசு ஆரம்பப்பள்ளி இருந்தாலும், மேல்நிலைப் பள்ளிக்கு செல்ல குழந்தைகள் பல கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் முதியவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக மலை இறங்கி நகர பகுதிகளுக்கு செல்வது மிகவும் சிரமமானதாக உள்ளது.
சாலை வசதி இல்லாததால் அத்தியாவசிய பொருட்கள், விவசாய உற்பத்திகள் மற்றும் அன்றாட தேவைகள் அனைத்தையும் கரடு முரடான மலைப் பாதைகளில் சுமந்து செல்ல வேண்டிய அவலம் தொடர்கிறது. குறிப்பாக மழைக்காலங்களில் பாதைகள் சேறும் சதுப்புமாக மாறி, கிராமங்கள் வெளி உலகத்திலிருந்து துண்டிக்கப்படுகின்றன. உடல்நலக் குறைபாடு ஏற்பட்டால் நோயாளிகளை டோலி கட்டி சுமார் 5 கிலோமீட்டர் தூரம் தூக்கிச் சென்று பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய பரிதாபகரமான நிலை நிலவுகிறது.
மலைவாழ் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, 2021 ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தின் கீழ் சோத்துப்பாறை முதல் கரும்பாறை வரை சுமார் 4 கிலோமீட்டர் தூரத்திற்கு கான்கிரீட் சாலை அமைக்க அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த அனுமதி மலைவாழ் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம், கல்வி, சுகாதாரம் மற்றும் அவசர சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்தும் நோக்கில் வழங்கப்பட்டது என கூறப்படுகிறது.
ஆனால் இதுவரை சாலை அமைக்கும் பணி தொடங்கப்படவில்லை. தற்போது குறவன் வழி கிராமத்தில் பழங்குடியினர் வசிப்பதில்லை என்றும், அந்தப் பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் இருப்பதாகக் கூறி கான்கிரீட் சாலை அமைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வன அலுவலர் அறிக்கை அளித்துள்ளார். இதற்கு மாறாக, அங்கு மக்கள் தொடர்ந்து வசித்து வருகிறோம் என்றும், அரசு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உண்மை நிலையை அறிய வேண்டும் என்றும் கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்த சூழ்நிலையில் சுமார் 50க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் மாவட்ட வன அலுவலரை நேரில் சந்தித்து, 2021 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் உடனடியாக கான்கிரீட் சாலை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.
குறவன் குழி கிராமத் தலைவர் சங்கிலி பேசியபோது, பல தலைமுறைகளாக இங்கு வாழ்ந்து வருகிறோம்; சாலை இல்லாததால் குழந்தைகள் கல்வி, மருத்துவ அவசர நிலை, விவசாய உற்பத்தி விற்பனை போன்ற அனைத்திலும் பாதிப்பு ஏற்படுகிறது; அனுமதி வழங்கப்பட்டும் நடைமுறைப்படாதது எங்களை வேதனைப்படுத்துகிறது; அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கரும்பாறை கிராமத்தைச் சேர்ந்த வெள்ளையம்மாள் கூறுகையில், மழைக்காலங்களில் பாதை முற்றிலும் சேதமடைந்து பெண்கள் மற்றும் முதியவர்கள் மிகவும் அவதியடைகின்றனர்; அவசர சிகிச்சை தேவைப்பட்டால் டோலி கட்டி தூக்கிச் செல்லும் நிலை இன்னும் தொடர்கிறது; எங்களுக்கு பாதுகாப்பான மற்றும் நிரந்தரமான சாலை வசதி அவசியம் எனக் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
மலைவாழ் பழங்குடியின மக்களின் அடிப்படை உரிமைகளான சாலை, சுகாதாரம், கல்வி மற்றும் பாதுகாப்பு ஆகியவை உறுதிசெய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பில் மக்கள் காத்திருக்கின்றனர்













