வெங்கட்ராமன் டிஜிபி நியமனத்திற்கு எதிரான மனு : உயர் நீதிமன்றம் தள்ளுபடி

தமிழக பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் கடந்த ஆகஸ்ட் 31 அன்று ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, உள்துறை செயலாளர் உத்தரவின்பேரில் நிர்வாகப் பிரிவு டிஜிபி வெங்கட்ராமன், இடைக்கால பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டார்.

இந்த நியமனத்திற்கு எதிராக ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளரும் வழக்கறிஞருமான ஆர். வரதராஜ், பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், டிஜிபி ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பே, தகுதியான அதிகாரிகளின் பட்டியலை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு அனுப்ப வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டினார். அந்த நடைமுறையை பின்பற்றாமல், வெங்கட்ராமனை பொறுப்பு டிஜிபியாக நியமித்திருப்பது சட்டத்திற்கு முரணானது எனவும், அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டது.

இந்த மனு, தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு ப்ளீடர் எட்வின் பிரபாகர், இதே போன்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் முன்பு உத்தரவு பிறப்பித்திருப்பதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர், வெங்கட்ராமன் நியமன அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். எனினும், டிஜிபி பதவி காலியாக இருந்த நிலையில், இடைக்கால நியமனமாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டதாகவும், அதனை எதிர்த்து பொதுநல மனு தாக்கல் செய்ய முடியாது என நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.

மேலும், இவ்விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கியிருப்பதால் தாங்கள் தலையிட விரும்பவில்லை எனக் கூறி, மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Exit mobile version