“தி.மு.க. அரசு ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி கொடுத்துள்ளது என்பது பெருமை அல்ல, வேதனைக்குரிய விஷயம்,” என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்தார்.
சென்னையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் ஈடுபட்ட பகுதிநேர ஆசிரியர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை சந்திக்க சென்ற சீமான், போலீசாரால் தடையிடப்பட்டதால் பரபரப்பு நிலவியது. கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களை சந்திக்க அனுமதி அளிக்கக் கோரி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது :
“தி.மு.க. அரசு, தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் விட்டதால்தான் ஆசிரியர்கள் இன்று வீதியில் போராட வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். அது குற்றமா? இந்த போராட்டத்திற்கு காரணமானது வாக்குறுதியை அளித்த அரசே. ஆனால் அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.”
மேலும் தொடர்ந்தும் அவர் குற்றம்சாட்டியதாவது:
“‘வீடு தேடி அரசு’ என்று விளம்பரம் செய்து கோடிக்கணக்கான பணத்தை செலவழிக்கிறார்கள். ஆனால் உண்மையில் என் மக்கள் ‘ரோடு தேடி அரசு’ என்று தெருக்களில் போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சேவை அரசியலும் செயல் அரசியலும் இந்த ஆட்சிக்கு தெரியாது. அவர்கள் செய்தது, செய்தி அரசியல் மட்டுமே.”
முதல்வர் சட்டமன்றத்தில் கூறிய, “ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்ற அறிக்கையை குறைத்தார் சீமான்.
“அந்த ஒரு லட்சம் போராட்டங்களும் இந்த அரசும் முந்தைய அரசும் மக்களுக்கு கொடுத்த ஒரு லட்சம் பிரச்சனைகளின் விளைவாகத்தான் வந்தவை. அதில் பெருமை ஏது?” என கேள்வி எழுப்பினார்.
“போராடி கொண்டிருப்பவர்கள் யார்? பெற்றோர் தான். அவர்களது குழந்தைகள் எந்த உலகில் வாழ வேண்டும் என்பதை வடிவமைப்பவர்கள் ஆசிரியர்கள். அவர்கள் போராடும் நிலைமைக்கே அரசு பொறுப்பேற்க வேண்டும்,” என்றார் சீமான்.