தமிழக அரசுப் பள்ளிகளில் நீண்டகாலமாகப் பணியாற்றி வரும் பகுதிநேரச் சிறப்பு ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலம் நடைபெறும் நேரடிப் பணி நியமனத் தேர்வுகளில் அவர்களுக்கு 15 சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப் பள்ளிக்கல்வித் துறை அதிரடி அரசாணை வெளியிட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜனவரி 24-ஆம் தேதி சட்டப்பேரவையில் அளித்த அறிவிப்பைச் செயல்படுத்தும் விதமாக, பள்ளிக்கல்வித் துறைச் செயலர் பி.சந்திர மோகன் இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இதன் மூலம் ஓவியம், தையல், இசை மற்றும் உடற்கல்வி போன்ற துறைகளில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களின் வாழ்வாதாரம் மேம்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறையின்படி, அனைவருக்கும் கல்வித் திட்டத்தின்கீழ் (Samagra Shiksha) பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு, அவர்கள் பணியாற்றிய ஒவ்வொரு ஆண்டிற்கும் 1.5 மதிப்பெண்கள் வீதம், அதிகபட்சமாக 15 மதிப்பெண்கள் வரை சிறப்புச் சலுகையாக வழங்கப்படும். இந்தச் சலுகையானது கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பணியில் நீடிக்கும் ஆசிரியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், அடுத்த 5 பணி நியமனத் தேர்வுகளுக்கு மட்டும் இந்த நடைமுறை பின்பற்றப்படும் என்றும் அரசாணையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இது ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்வுகளில் கலந்துகொள்ளும் பகுதிநேர ஆசிரியர்களுக்குப் பணி இடஒதுக்கீடு மற்றும் முன்னுரிமை கிடைக்கப் பெரும் உதவியாக இருக்கும்.
தற்போது நடைமுறையில் உள்ள சிறப்பு ஆசிரியர் நியமனத் தேர்வுகள் மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகின்றன. இதில் 95 மதிப்பெண்கள் எழுத்துத் தேர்விற்கும், மீதமுள்ள 5 மதிப்பெண்கள் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பிற்கும் (Seniority) வழங்கப்பட்டு வருகின்றன. இனி வரும் காலங்களில், எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றுச் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு வரும் தகுதியுள்ள பகுதிநேர ஆசிரியர்களுக்கு, வேலைவாய்ப்புப் பதிவு மூப்பு மதிப்பெண்களுடன் கூடுதலாக இந்த 15 சிறப்பு மதிப்பெண்களும் சேர்க்கப்படும். அரசின் இந்தத் துரித நடவடிக்கை, பத்தாண்டுகளுக்கும் மேலாகப் பணி நிரந்தரத்திற்காகக் காத்திருந்த ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
