பெரம்பலூர் நகரில் நேற்று இரவு திடீரென இடி மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. அப்போது பெரம்பலூர் நகராட்சி 12 வது வார்டு பகுதியில் பாதாள சாக்கடையில் இருந்து வெளியேறு ம் கழிவு நீர் பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து கடும் துர்நாற்றம் வீசியது. இதனால் அவதி அடைந்த பொது மக்கள் இது குறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை தகவல் தெரிவித்தும் சம்பவ இடத்திற்கு வந்து வீடுகளுக்குள் புகுந்த கழிவுநீரை வெளியேற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
மேலும் ஒவ்வொரு முறை மழை பெய்யும் போது 12வது வார்டு பகுதியில் இதே போன்று கழிவுநீர் வீடுகளுக்குள் புகுவது தொடர்கதையாகி வருகிறது. இப்பிரச்சனை தொடர்பாகவும் பொது மக்களின் குறைகளை தீர்க்கவும் 12வது வார்டு திமுக கவுன்சிலர் சசி இன்ஃபெண்டா எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி பொதுமக்கள் திமுக வார்டு கவுன்சிலர் சசி இன்ஃபெண்டா புகைப்படத்துடன் கவுன்சிலரை காணவில்லை என்ற பதாகையை கையில் ஏந்தி பெரம்பலூர் நகரின் மையப் பகுதியான காமராஜர் வளைவு பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். பொதுமக்கள் வார்டு கவுன்சிலரை காணவில்லை என்ற பதாகையுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரம்பலூர் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.