நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஹரியானா மாநிலத்தின் வாக்காளர் பட்டியலில் பெரும் முறைகேடு நடைபெற்றதாக குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து பல ஆவணங்களையும் இன்று செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார். அவரது இந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக ஊடகத்தில் கடும் எதிர்வினை தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் மௌனத்தை சுட்டிக்காட்டிய அவர், “மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் தேர்தல் ஆணையம், இந்த குற்றச்சாட்டுகளுக்கு உரிய விளக்கம் அளிக்குமா? மக்களாட்சியின் நம்பிக்கையை காப்பாற்றுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
“அண்மைக் காலமாக பா.ஜ.க. வெற்றிகளின் நம்பகத்தன்மை மீதான சந்தேகம் மீண்டும் உருவாகியுள்ளது. ஹரியானாவில் வாக்குத் திருட்டு நடந்தது என ராகுல் காந்தி வெளியிட்ட ஆதாரங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. வெறுப்பும் பொய்யும் மூலமாக ஆட்சிக்கு வந்த பா.ஜ.க., இப்போது மக்களின் ஜனநாயக தீர்ப்பையே களவாடுகிறது.”
அதனைத் தொடர்ந்து, “SIR என்ற பெயரில் நடக்கும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் கூட மக்களின் வாக்குரிமையை பறிக்கும் சதிதான். ஹரியானா மற்றும் பீகாரில் நடந்துள்ள சம்பவங்கள் இதற்கே சான்று. இத்தனை ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டும் தேர்தல் ஆணையம் மௌனமாக இருப்பது கவலைக்குரியது,” எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முடிவில் அவர், “மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் தேர்தல் ஆணையம் மக்கள் முன் விளக்கம் அளித்து, இந்தியாவின் மக்களாட்சிக்கு மீண்டும் நம்பிக்கை அளிக்க வேண்டும்,” என வலியுறுத்தினார்.

















