மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறும் கருத்துகளை மக்கள் முக்கியத்துவத்துடன் எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நடந்த விஜய் தலைமையிலான தவெகக் கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் பலர் உயிரிழந்ததை அடுத்து, கமல்ஹாசன் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அவர், “பாதுகாப்பு குறைபாடு என்று யார் குற்றம் சொல்கிறார்கள் என்பதை ஆராய வேண்டும். விஷயம் நீதிமன்றத்தின் கவனத்தில் இருக்கும்,” என தெரிவித்தார்.
இந்தக் கருத்துக்கு எதிராக பதிலளித்த அண்ணாமலை, “ஒரு ராஜ்யசபா பதவிக்காக கமல் ஹாசன் தன்னுடைய ஆன்மாவையே விட்டுவிட்டார். அவருடைய எந்த கருத்தையும் மக்கள் இனி சீரியஸாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். கரூர் சம்பவத்தில் நிர்வாகத்தின் தோல்வி இல்லை எனக் கூறுவது நியாயமல்ல,” என்றார்.
மேலும் அவர், “கமல் ஒரு சிறந்த நடிகர் என்பது அனைவரும் ஏற்கும் உண்மை. ஆனால் அரசியலில் அவர் பேசுவது எப்போதும் ஒரு கட்சி சார்பானதாகவே இருக்கும். கரூர் போன்ற சம்பவங்களிலும் அவர் திமுகவையே ஆதரிக்கிறார். திமுகவின் தவறு தெளிவாக இருக்கிறது,” என குற்றஞ்சாட்டினார்.

















