சென்னை:
தமிழகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் கிட்னி மாற்று முறைகேடு தொடர்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியதாவது:
“போலி ஆவணங்களின் அடிப்படையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, இரண்டு தனியார் மருத்துவமனைகளின் உரிமம் அரசால் ரத்து செய்யப்பட்டது. அதில் ஒன்று திமுக சட்டமன்ற உறுப்பினருக்குச் சொந்தமானது என்பது கவலைக்கிடமானது.
இந்நிலையில், திருச்சியில் உள்ள செதார் மருத்துவமனை நிர்வாகம், அரசின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால், அரசு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் உரிய முறையில் வாதிடாததால், அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை திமுகவின் ஆதரவாக பயன்படுத்தி, குறித்த மருத்துவமனையும் தப்பிக்க முயற்சிக்கிறது என தெரிகிறது.
முதல்வர் மு.க. ஸ்டாலின் இதற்கு நேரடியாக பொறுப்பு ஏற்க வேண்டும். தன் கட்சியினரின் நலனுக்காக மக்களின் நலனை புறக்கணிக்கும் ‘ஃபெய்ல்யர் மாடல்’ ஆட்சியெனும் சான்று இது,” என இபிஎஸ் குற்றம்சாட்டினார்.
அத்துடன், “சுயநல நோக்கோடு செயல்படும் திமுகவிற்கு 2026ஆம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன், இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்படும்,” எனவும் அவர் உறுதியளித்தார்.
