சமீபத்தில் மேற்கொண்ட ஐரோப்பிய நாடுகளுக்கான வெளிநாட்டு பயண அனுபவங்களைப் பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ஸ்டாலின் செயலி மூலம் மக்களுடன் பகிர்ந்துள்ளார். “ஐரோப்பிய பயணமும், ஆக்ஸ்போர்டு நினைவுகளும்” என்ற தலைப்பில் மக்களிடம் வந்த கேள்விகளுக்கு அவர் வீடியோவின் மூலம் பதிலளித்தார்.
ஜெர்மனியில் நடைபெற்ற சந்திப்புகள் குறித்து அவர் கூறியதாவது :
“முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடும்போது, தமிழகத்தின் கட்டமைப்பு வசதிகள், திறமையான இளைஞர்கள், திறன் மேம்பாட்டு முயற்சிகள் குறித்து விளக்கினோம். அந்நாட்டு அமைச்சர்களும் தமிழ்நாட்டைப் பற்றி பெருமையாகப் பேசியது மகிழ்ச்சி அளித்தது. இந்தியாவில் பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்பு அளிக்கும் மாநிலமாகவும், அனைத்து துறைகளிலும் சம வாய்ப்பு வழங்குவதிலும் தமிழகம் முன்னிலையில் இருப்பதை அவர்கள் வியந்து பாராட்டினர். இதனால் பல முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்,” என்றார்.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பயணம் குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார் :
“ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்தப் பல்கலைக்கழகத்தில் நம் மாணவர்கள், லண்டன் மற்றும் ஜெர்மனி மாணவர்களுடன் இணைந்து படித்து வருகிறார்கள். அரசு பள்ளி இடஒதுக்கீட்டின் மூலம் வெளிநாட்டில் முழு ஸ்காலர்ஷிப் பெற்று உயர்கல்வி பயிலும் மாணவர்கள் இருப்பதை பெருமையுடன் கேட்டறிந்தேன்,” என்றார்.
மேலும், ஐரோப்பிய நாடுகளில் பொதுமக்கள் பொது இடங்களில் கடைபிடிக்கும் பொறுப்புணர்வைப் போல, நம் நாட்டிலும் மக்கள் அதையே பின்பற்ற வேண்டும் என விருப்பம் தெரிவித்தார்.