பாட்னா: பீஹாரில் ஊழலை ஒழிக்க மக்கள் பெருமளவில் ஓட்டளித்துள்ளனர் என்று ஜன் சுராஜ் கட்சித் தலைவர் மற்றும் தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
பீஹாரில் நவம்பர் 11ஆம் தேதி இரண்டாம் கட்ட சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்கான வாக்குப்பதிவு உற்சாகமாக நடந்துவரும் நிலையில், முடிவுகள் நவம்பர் 14ஆம் தேதி வெளியாகும்.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பிரசாந்த் கிஷோர் கூறியதாவது: “பீஹார் மக்கள் இம்முறை ஜாதி, மதம், பணம் போன்றவற்றைக் கடந்து, நல்ல மற்றும் ஊழல் ரஹிதமான சமூகத்திற்காக ஓட்டளித்துள்ளனர். சுதந்திரத்திற்குப் பிறகு இதுபோன்ற அளவிலான வாக்குப்பதிவு பீஹாரில் இதுவரை நடைபெறவில்லை,” என்றார்.
மேலும், “காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் வருகை பீஹார் தேர்தலில் எந்த பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அவருக்கு மாநிலத்தின் உண்மையான நிலைமை குறித்து புரிதல் இல்லை. அவர் வெறும் சுற்றுப்பயணத்திற்காக மட்டுமே வருகிறார். பீஹார் மக்கள் அவரது பேச்சுகளை சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லை,” என்றும் பிரசாந்த் கிஷோர் குறிப்பிட்டார்.

















