மழைக்கால கூட்டத் தொடர் மூன்றாவது நாளாகவும் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கடும் அமளி காரணமாக பார்லிமென்ட் செயலிழந்தது. லோக்சபா, ராஜ்யசபா இரண்டும் இன்று (ஜூலை 23) பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
ஜூலை 21ஆம் தேதி தொடங்கிய பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடர் ஆகஸ்ட் 21 வரை நடைபெறவிருக்கிறது. இந்த கூட்டத்தொடரில் பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளது.
ஆனால், கடந்த மூன்று நாட்களாக இரு அவைகளிலும் அலுவல்கள் நடைபெற முடியாமல் உள்ளன. எதிர்க்கட்சிகள், பீஹாரில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் குறித்து எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று காலை லோக்சபா தொடங்கியதும், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சபாநாயகர் ஓம் பிர்லா பலமுறை எச்சரித்தும் அவர்கள் அமளியை நிறுத்தவில்லை. இதனால் லோக்சபா பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல், ராஜ்யசபாவும் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதனால் பார்லிமென்ட் கூட்டத் தொடர் தொடர்ந்து மூன்றாவது நாளாக செயலிழந்த நிலை ஏற்பட்டுள்ளது.