வழுவூரில் 15 ஆண்டுகளாக இயங்கிவந்த தனியார் பள்ளியை மூடப்போவதாக நிர்வாகத்தின் அறிவிப்பால் பெற்றோர் அதிர்ச்சி

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா வழுவூர் கிராமத்தில் ராதா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி என்ற தனியார் பள்ளி கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இப்பள்ளியில் தற்போது 400 மாணவ- மாணவிகள் பயின்று வரும் நிலையில், அவர்களில் சுமார் 100 மாணவர்கள் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியை இந்த வருடத்துடன் மூடிவிட்டு, அந்த இடத்தில் மருத்துவமனை நடத்துவதற்கு பள்ளி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையறிந்த கிராமமக்கள் பள்ளியை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்திடம் மனு அளித்தனர். கிராமப் பகுதியில் வசிக்கும் ஏழை மக்களாகிய தாங்கள், இலவச கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் இந்த தனியார் பள்ளியில் தங்கள் குழந்தைகளை குறைந்த கட்டணத்தில் படிக்க வைப்பதாகவும், பள்ளியை மூடினால் குழந்தைகளுக்கு கல்வியை வழங்குவதில் சிரமம் ஏற்படும். எனவே, தற்போது இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் பயின்று வரும் மாணவர்கள் படிப்பை முடிக்கும் வரை பள்ளியை தொடர்ந்து நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

Exit mobile version