மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் பங்குனி உத்திரப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்தனர்:-
மயிலாடுதுறை திருஇந்தளூரில் அமைந்துள்ள பரிமளரெங்கநாதர் கோயில், பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள்புரியும் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்கங்களில் ஐந்தாவது தலமாகும். திருமங்கையாழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்களால் பாடல் பெற்ற 1,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த கோயில், சந்திரனின் சாபம் தீர்த்ததும், 108 வைணவ திவ்ய தேசங்களில் 22வது திவ்யதேசமும் ஆகும். இக்கோயில் பங்குனி உத்திர பெருந்திருவிழா கடந்த 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. தினந்தோறும் பரிமளரெங்கநாதர் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் 9-ஆம் திருநாளின் முக்கிய நிகழ்வாக திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. பெருமாள் திருத்தேரில் எழுந்தருள செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனைக்கு பின் நடைபெற்ற தேரோட்டத்தில் பக்தர்கள் கோவிந்தா, கோபாலா, வெங்கட்ரமணா, பரிமள ரங்கநாதா என்ற பக்தி முழக்கத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்து பெருமாளை தரிசனம் செய்தனர். தேரோடும் நான்கு வீதிகளில் தேர் வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது. மதியம் சந்திர புஷ்கரணி திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவமும், மாலை பெருமாள் தாயார் திருமஞ்சனம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் பங்குனி உத்திரப் பெருந்திருவிழா
