திருவாரூரில் வீட்டுமனை ஒப்புதல் ரசீது வழங்க ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அவரது உதவியாளரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம், கீழகாவாதுகுடி பகுதியைச் சேர்ந்த பாரதிதாசன், தனது வீட்டுமனைக்கு அப்ரூவல் பெறுவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவாரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகியுள்ளார். அப்போது அலுவலகத்தில் பணியாற்றி வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சுவாமிநாதன் மற்றும் அவரது உதவியாளர் சுரேஷ்குமார் ஆகியோர், வீட்டுமனை ஒப்புதல் ரசீது வழங்க ரூ.7 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் எனக் கேட்டதாக கூறப்படுகிறது.
லஞ்சம் வழங்க விருப்பமில்லாத பாரதிதாசன், இதுகுறித்து திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து காவல்துறையினர் முதற்கட்ட விசாரணை மேற்கொண்டு, லஞ்சம் கேட்கப்பட்டதாக உறுதி செய்த பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பிடிக்க திட்டமிட்டனர். இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ரசாயனம் தடவிய ரூ.7 ஆயிரம் பணத்தை பாரதிதாசனிடம் வழங்கி, அதை அதிகாரிகளிடம் கொடுக்க அறிவுறுத்தினர்.
இன்று திருவாரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பாரதிதாசன், அதிகாரிகளிடம் பணத்தை வழங்கியபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துணை காவல் கண்காணிப்பாளர் நந்தகோபால் தலைமையிலான காவல்துறையினர் திடீரென உள்ளே நுழைந்து, வட்டார வளர்ச்சி அலுவலர் சுவாமிநாதன் மற்றும் அவரது உதவியாளர் சுரேஷ்குமார் ஆகிய இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர்.
தொடர்ந்து இருவரிடமும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அலுவலகத்தில் உள்ள முக்கிய ஆவணங்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.அரசு அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம் திருவாரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
