மயிலாடுதுறையில் ஐப்பசி மாதத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் காவிரி துலா உற்சவம் சிவாலயங்களில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ அபயாம்பிகை உடனாகிய ஸ்ரீ மாயூரநாதர் ஆலயத்தில் துலா உற்சவம் கடந்த மாதம் 18ஆம் தேதி துவங்கி தீர்த்தவாரி உற்சவம் தினந்தோறும் நடைபெற்று வருகிறது. கடந்த ஏழாம் தேதி ரிஷப கொடி ஏற்றத்துடன் தொடங்கி பத்து நாள் உற்சவத்தின் ஒன்பதாம் திருநாளான இன்று மாலை 4:00 மணிக்கு திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு சர்வ அலங்காரத்தில் பஞ்சமூர்த்திகள் திருத்தேர்களில் எழுந்தருள செய்யப்பட்டது. ஆலயத்தில் சிறப்பு தீபாராதனை வழிபாடுகளுக்கு பின் விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஸ்ரீ அபயாம்பிகை, ஸ்ரீ மாயூரநாதர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் தனித்தனியாக 5 தேர்களில் எழுந்தருளைச் செய்யப்பட்டு நெய்வேத்தியம் படைக்கப்பட்டு தீபாராதனை செய்யப்பட்டு தேர் நகர்த்தி வைக்கப்பட்டது. மாலை 4 மணியளவில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளியுள்ள ஐந்து தேர்களும் பக்தர்கள் வடம் பிடிக்க தேரோடும் நான்கு ரத விதிகளில் வலம் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து சுவாமி தரிசனம் செய்ய உள்ளனர்.
