மயிலாடுதுறையில் ரயில்வே மேம்பாலம் 6கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக துண்டு பிரசுரம்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் 1975 ஆம் ஆண்டு ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது. பாலம் 50 ஆண்டுகளை கடந்த நிலையில், ஒரு சில இடங்களில் பாலத்தில் விரிசல் ஏற்பட்டது. பாலத்தின் உறுதித் தன்மைக்காக ஆறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாலம் சீரமைக்கும் பணி நடைபெற்றது. பாலத்தின் நடுவில் இருந்த இரும்பு பேரிங்குகள் மீண்டும் புதிதாக மாற்றப்பட்டது. மேலும் விரிசல் பகுதிகள் சீரமைக்கப்பட்டன. இந்த பணிக்காக கடந்த மூன்று மாத காலமாக பாலம் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டது. இந்நிலையில் நெடுஞ்சாலை துறை சார்பில் தெற்கு ரயில்வே பொறியாளர்களுக்கு அனுப்பி இருந்த கடிதத்தில், பாலத்தின் பேரிங்குகள் மாற்றம் செய்யத் தேவையில்லை நல்ல முறையில் உள்ளதாக விளக்க கடிதம் அளிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆறு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பாலம் பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. பொதுமக்கள் வரிப்பணம் தேவையற்ற முறையில் வீணடிக்கப்பட்டுள்ளதாகவும், கமிஷன் பணத்திற்காக திமுக தேவையற்ற முறையில் பணத்தை செலவு செய்துள்ளதால் இதுகுறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்து, பாரதிய ஜனதா கட்சி தேசிய செயற்குழு உறுப்பினர் கே ராஜேந்திரன் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் பாலத்தில் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்தனர். மேலும் பாலத்தில் முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவில்லை இதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டினர். இது குறித்து பாலம் திறப்பு விழாவில் பங்கேற்ற தமிழக அமைச்சர் மெய்யநாதனிடம் செய்தியாளர்கள் விளக்கம் கேட்ட பொழுது, பாலத்தின் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளதால் பொதுமக்கள் நலன் கருதி பாலம் திறக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்றும், பாலத்தில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை தற்பொழுது பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் இன்னும் 50 ஆண்டுகளுக்கு பாலம் உறுதித் தன்மையுடன் இருக்கும் என்றும் அமைச்சர் விளக்கம் அளித்தார்.

Exit mobile version