அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளை பனி மூடி இருக்கும் நிலையில், ஒரே வாரத்தில் மூன்றாவது கடும் பனிப்புயல் உருவாகி உள்ளது. வானிலை நிபுணர்கள் ‘பாம் சைக்ளோன்’ என்று வகைப்படுத்திய இந்த அதிதீவிர புயல் தாக்கத்தால் சுமார் 5.5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் நவம்பர் முதல் மார்ச் வரை குளிர்காலம் நீடிப்பதால், இந்த காலத்தில் பல பனிப்புயல்கள் வழக்கமாக ஏற்படும். வெப்பநிலை மைனஸ் 10°C முதல் மைனஸ் 25°C வரை குறையும் நிலையில், நியூயார்க், மாசசூசெட்ஸ், பென்சில்வேனியா, மைனே உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் தாக்கம் அதிகமாக உள்ளது.
கடந்த வாரத்திலேயே இரண்டு பனிப்புயல்கள் அமெரிக்காவை தாக்கியதால், தற்போது 33% நிலப்பரப்பு பனியில் மூழ்கியுள்ளதாக தகவல். 2019ஆம் ஆண்டு இதே காலத்தில் இது 41% ஆக இருந்தது. புதிய பனிப்பொழிவு காரணமாக, கொலராடோவின் ராக்கி மலைப்பகுதியில் ஒரு அடி உயரம் வரை பனி படிந்ததாக தேசிய வானிலை சேவை தெரிவித்துள்ளது.
கன்சாஸ் சிட்டியில் 10 செ.மீ மற்றும் செயின்ட் லூயிஸில் 7 செ.மீ அளவுக்கு பனி பதிவாகியுள்ளது. செயின்ட் லூயிஸ் பகுதியில் படர்ந்த பனி காரணமாக நெடுஞ்சாலைகளில் பல விபத்துகள் நிகழ்ந்துள்ளன. வாகன ஓட்டிகள் அவசியமில்லாத பயணங்களை தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
இதற்கிடையில், நேற்று உருவான புதிய குளிர் மண்டலம் குறுகிய நேரத்தில் கடுமையாக வலுவடைந்து ‘பாம் சைக்ளோன்’ என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் 24 மில்லிபார் அளவுக்கு காற்றழுத்தம் குறைந்தால் அந்தப் புயல் ‘பாம் சைக்ளோன்’ என கருதப்படும்.
இந்த பனிப்புயலை முன்னிட்டு, மோண்டானா முதல் மைனே வரை 2,500 கி.மீ நீளத்தில் உள்ள 27 மாநிலங்களுக்கு வானிலை மையம் அதிதீவிர எச்சரிக்கை வழங்கியுள்ளது.
அத்தியாவசிய தேவைகளான உணவு, தண்ணீர், மருந்துகள் போன்றவற்றை சேமித்து வைத்திருக்கவும், வெளிப்புறப் பயணங்களை தவிர்க்கவும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். பல மாநிலங்கள் தினசரி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட நிலையில் அவசர சேவைகள் தயார்நிலையிலிருக்கும் என கூறப்பட்டுள்ளது.
















