கும்பகோணம்: 2026ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அனைத்து கட்சிகளும் தேர்தல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ளன. ஆட்சியை மீண்டும் கைப்பற்ற வேண்டுமென்ற குறிக்கோளுடன் அதிமுகவும் பரப்புரை பயணத்தை தீவிரப்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தற்போது “மக்களை காப்போம்.. தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக மீது கடும் விமர்சனங்களை பதிவு செய்தார்.
“பழனிசாமிக்கு படிப்புணா கசக்கிறது என ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், படிப்பிருக்கிறதால்தான் பல்கலைக்கழகங்களையும், கல்லூரிகளையும் நாம் திறந்தோம். ஸ்டாலின் எத்தனை கல்வி நிறுவனங்களைத் திறந்துள்ளார்?” என்று கேள்வி எழுப்பினார்.
அத்துடன், நீட் தேர்வு தொடர்பாகவும் கருத்து தெரிவித்த அவர்,
“நீட் தேர்வு ரத்து செய்ய ரகசியம் இருப்பதாக உதயநிதி கூறினார். ஆனால் இப்போது வரை அந்த ரகசியத்தை வெளிக்கொணரவில்லை. இதனால் 25 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்குப் பொறுப்பு ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசே” என்றார்.
தொடர்ந்து கூட்டணி விவகாரத்தைத் தாக்கல் செய்த பழனிசாமி,
“பாஜக அதிமுகவை விழுங்கிவிடும் என ஸ்டாலின் கூறுகிறார். பழனிசாமி என்ன புழுவா? பாஜகவுக்குள் விழுந்து விட? ஸ்டாலின்தான் கூட்டணி கட்சிகளை விழுங்கிக் கொண்டிருக்கிறார். காங்கிரஸ் தேய்ந்து விட்டது, கம்யூனிஸ்ட் கட்சி கண்ணுக்குத் தெரியவில்லை. விசிக ஒட்டிக்கொண்டு இருக்கிறது. அதிமுக தான் தனித்தே வெற்றி பெறும்,” என கடும் வரிகளில் சாடினார்.
இதே நேரத்தில், சமீபத்தில் சென்னை வந்த அமித்ஷா, “2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்றால், கூட்டணி ஆட்சி அமையும்” என தெரிவித்திருந்தார். ஆனால் பழனிசாமி தொடர்ந்து “தமிழகத்தில் கூட்டணி ஆட்சி கிடையாது, அதிமுக தனியே ஆட்சி அமைக்கும்” என வலியுறுத்தி வருவதால், பாஜகவினர் மத்தியில் அமைதியற்ற நிலை உருவாகியுள்ளது.