மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியில் ஆன்மீகமும் பாரம்பரியமும் இணைந்த திருவிழாவாக, தெற்கூர் நாயுடு உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ பட்டாளம்மன் திருக்கோவில் தை மாத பௌர்ணமி பொங்கல் உற்சவ விழா மிகவும் விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. தை நிலவின் ஒளியில் ஊரே விழாக்கோலம் பூண்டிருக்க, மேளதாளங்கள் முழங்க, வானவேடிக்கைகள் அதிர பக்தி பரவசத்துடன் விழா தொடங்கியது. முன்னதாக, பாரம்பரிய முறைப்படி கோவில் பூசாரி இல்லத்திலிருந்து மேளதாளங்கள் மற்றும் தாரை தப்பட்டை முழங்க புனித பொருட்கள் அடங்கிய தட்டுக்களுடன் ஊர்வலம் புறப்பட்டது. இந்த ஊர்வலமானது கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து, மந்தை கிழவி அம்மன் மற்றும் ஸ்ரீசாத்தா கோவிலை வந்தடைந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, ஆகம விதிகளின்படி ‘கனி மாற்றும்’ வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, அதே பக்திப் பரிவாரங்களுடன் ஊர்வலமானது ஸ்ரீ பட்டாளம்மன் கோவிலை வந்தடைந்தது. அங்கு பெரிய செட்டி பாட்டியம்மாள் மற்றும் பட்டாளம்மனுக்கு உலக நன்மை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் நூற்றுக்கணக்கான பெண்கள் ஒரே நேரத்தில் சர்க்கரை பொங்கலிட்டு தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர். பின்னர் அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் மஹா அபிஷேகம் நடத்தப்பட்டு, பட்டு உடுத்தி சந்தனக் காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மகா தீபாராதனை நடைபெற்ற போது கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் “ஓம் சக்தி” என முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். விழாவின் நிறைவாக, கோவிலுக்கு வருகை தந்த அனைத்து பக்தர்களுக்கும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த ஆன்மீக விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பாலமேடு தெற்கூர் நாயுடு உறவின் முறை சங்கத்தினர் மிகச்சிறப்பாக ஒருங்கிணைத்து செய்திருந்தனர்.
















