கடும் நிதி நெருக்கடிகளை சந்தித்து வரும் பாகிஸ்தான், அரசுக்கு சொந்தமான பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (PIA) நிறுவனத்தை 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் விற்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
பாகிஸ்தான் அரசின் கீழ் இயங்கும் தேசிய விமான நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியான நஷ்டத்தை சந்தித்து வருகிறது. கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம், நிறுவன ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதன் மூலம், PIA-வில் நிலவும் கடுமையான நிதி சிக்கல் வெளிப்பட்டது.
2023ஆம் ஆண்டு, PIA-வை தனியார் மயமாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதிலும், அது வெற்றிபெறவில்லை. தற்போது, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) 7 பில்லியன் டாலர் நிதி திட்டத்தின் கீழ், பாகிஸ்தான் அரசு நிதி திரட்டும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, அரசுக்கு சொந்தமான PIA நிறுவனத்தின் 51% முதல் 100% பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், பங்குகளை வாங்க முன்வந்துள்ள நான்கு முக்கிய தரப்புகளுக்கு, பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதில், வணிகக் குழுக்கள் மற்றும் இராணுவ ஆதரவுடன் செயல்படும் நிறுவனங்கள் அடங்கும்.
PIA நிறுவனத்தின் ஏலம் மற்றும் பங்குவிற்பனை தொடர்பான பேச்சுவார்த்தைகள், 2025ஆம் ஆண்டின் இறுதியில் — செப்டம்பர் முதல் நவம்பர் மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.