புதுடில்லி : அன்றாட பயன்பாட்டு பொருட்கள், விவசாய உபகரணங்கள், காப்பீடு, உயிர்காக்கும் மருந்துகள் உள்ளிட்டவற்றுக்கான ஜிஎஸ்டி விகிதங்களை குறைக்கும் வகையில், டில்லியில் நேற்று நடைபெற்ற 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் சுகாதார துறை நேரடியாக பயனடையவுள்ளனர்.
மத்திய அரசின் இந்த முடிவை பல்வேறு தரப்பினர் வரவேற்று வரும் நிலையில், முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது எதிர்வினையை வெளியிட்டுள்ளார்.
“சரக்கு மற்றும் சேவைகளின் வரி விகிதங்களை குறைத்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், இது மிகவும் தாமதமான நடவடிக்கை. 8 ஆண்டுகளுக்கு முன்பே இதுபோன்ற குறைப்புகள் அமல்படுத்தப்பட வேண்டியிருந்தது. தற்போதைய ஜிஎஸ்டி வடிவமைப்பு மற்றும் அந்நாளில் நிர்ணயிக்கப்பட்ட விகிதங்கள் முறையே தவறானவை. கடந்த 8 ஆண்டுகளாக இதற்கு எதிராக எங்கள் குரலை தொடர்ந்து எழுப்பியிருந்தோம். ஆனால் எங்களின் கோரிக்கைகள் அப்போது புறக்கணிக்கப்பட்டது,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த தாமதமான மாற்றங்களை செய்ய அரசை தூண்டியது என்ன என்பதை சிதம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார். “மந்தமான வளர்ச்சியா? அதிகரிக்கும் குடும்பக் கடனா? குறையும் குடும்ப சேமிப்புகளா? பீஹார் தேர்தலா? அல்லது அனைத்துமே சேர்ந்து காரணமா?” என அவர் சாடித்துள்ளார்.