புதுடில்லி : லோக்சபாவில் நடைபெற்ற உரையின்போது, பாகிஸ்தானுக்கு நற்சான்று வழங்க முனைவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீது குற்றம்சாட்டினார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
‘ஆபரேஷன் மகாதேவ்’ நடவடிக்கையின் வெற்றியை விவரித்த அமித் ஷா, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவித்தார். முக்கிய குற்றவாளி சுலைமான் உட்பட அனைவரும் இந்திய ராணுவத்தினால் அகற்றப்பட்டனர் என்றும், அவர்கள் பயன்படுத்திய எம்.9 மற்றும் ஏ.கே-47 ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறினார்.
“பாகிஸ்தானுக்கு தப்பி செல்ல பயங்கரவாதிகள் முயற்சித்தார்கள். ஆனால் அதை தடுக்க ராணுவம் வெற்றிகரமாக செயல்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் போன்று, ஆபரேஷன் மகாதேவும் முழுமையாக வெற்றியடைந்தது,” என அவர் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சியினர் வரவேற்கவில்லை என்றும், பாகிஸ்தானை பாதுகாக்கும் வகையில் ப.சிதம்பரம் பேசியிருப்பதாகவும் குற்றம்சாட்டினார். “பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதற்கான ஆதாரம் என்ன?” என்று சிதம்பரம் கேள்வி எழுப்பியதை மறைமுகமாக விமர்சித்த அமித் ஷா, “அவர் பாகிஸ்தானுக்கு நற்சான்றிதழ் வழங்க விரும்புகிறார்” என கூறினார்.
மேலும், மோடி தலைமையிலான அரசு, மன்மோகன் சிங் ஆட்சியைப்போல அமைதியாக பார்த்து கொண்டு இருக்காது என்றும், பயங்கரவாதத்துக்கு எதிராக உறுதியாக நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறினார். “பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களை 22 நிமிடங்களில் அழித்தோம். இது ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியைக் காட்டுகிறது” என அமித் ஷா வலியுறுத்தினார்.
“பாகிஸ்தான் கெஞ்சியதால் போரை நிறுத்தியது இந்தியா தான். நேருவின் காலத்தில் நடைபெற்ற போர்நிறுத்தம், பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிரச்னையை உருவாக்கியது” என்றும் சிம்லா ஒப்பந்தத்தில் பதிலடி கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் கூறினார்.