மத்திய பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்ட தரமற்ற உணவால் 3 வாரத்தில் 160 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உடல் நலப்பிரச்சனைகள் ஏற்பட்டதாக மாணவர்கள் குற்றச்சாட்டு.
முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் சீரிய முயற்சியால் தமிழ்நாட்டிலேயே ஒரே ஒரு மத்திய பல்கலைக்கழகத்தை திருவாரூர் மாவட்டம் நீலக்குடி பகுதியில் அமைத்தார். இந்த தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா, பஞ்சாப், மத்திய பிரதேஷ் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 3000த்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.
இந்த தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக மாணவ மாணவியர் தங்கும் விடுதிகளில் வழங்கப்படும் உணவுகள் தரமற்ற முறையில் இருப்பதாகவும் புழுக்கள், இரும்பு துகள்கள், கம்பி போன்றவை உணவில் கிடப்பதாக குற்றம் சாட்டு எழுந்துள்ளது.
கடந்த மூன்று வாரத்தில் மட்டும் 160 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு கடுமையான வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டு மாணவர்கள் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
மாணவர் கூட்டமைப்பு சார்பாக பல்கலைக்கழக மையப் பகுதியில் நேற்று இரவு நடைபெற்ற கூட்டத்தில் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் பல்கலைக்கழக மாணவர்கள் கூட்டமைப்பு சார்பாக மனு அளித்து குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கையொப்பமிட்ட மனு மற்றும் உணவில் இரும்பு துண்டு கம்பி கிடப்பது போன்ற வீடியோ, புழுக்கள் கிடப்பது போன்ற புகைப்படங்கள், மாணவர்கள் கலந்துரையாடல் கூட்டம் நிகழ்வு வீடியோ வெளியாகி மத்திய பல்கலைக்கழக உணவு குறித்தும் மத்திய பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களின் உடல் நலன் குறித்தும் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
உடனடியாக மத்திய பல்கலைக்கழக நிர்வாகம் தலையிட்டு மாணவர்களின் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
















