போர்க்களமாக மாறிய ரிப்பன் மாளிகை – நள்ளிரவில் 1,000க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கைது

சென்னை : ராயபுரம், திரு.வி.க நகர் மண்டலங்களில் கடந்த மாதம் முதல் தூய்மை பணியை தனியார் நிறுவனம் மேற்கொள்வதை எதிர்த்து, தூய்மை பணியாளர்கள் கடந்த 1ஆம் தேதி முதல் சென்னை மாநகராட்சி அலுவலகம் அருகே தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அவர்களுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்துவதை நிறுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, நேற்று நள்ளிரவில் ரிப்பன் மாளிகை பகுதியில் காவல் துறை குவிக்கப்பட்டது. போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு எச்சரித்தும், அவர்கள் மறுத்ததால், அவர்களுக்கு ஆதரவாக திரண்டவர்களுடன் சேர்த்து சுமார் 1,000 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், போராட்டக்காரர்கள் மற்றும் போலீஸார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் சிலர் மயக்கம் அடைந்தனர். கைது செய்யப்பட்டவர்கள் பேருந்துகளில் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். வேளச்சேரி அம்மா மண்டபத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட 50 பேர் அங்கு இறங்கி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் மீண்டும் அங்கிருந்து அகற்றப்பட்டனர்.

இந்நிலையில், போராட்டம் நடைபெற்ற ரிப்பன் மாளிகை பகுதியை மாநகர காவல் ஆணையர் அருண் நேரில் ஆய்வு செய்தார். இதனையடுத்து, அண்ணா சாலை, சர்தார் படேல் சாலை, வேளச்சேரி–சின்னமலை சந்திப்பு, வடசென்னை உள்ளிட்ட பகுதிகளில் காவல் துறையினர் இரவு முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.

Exit mobile version