மதுரை: “தவெகவுக்கு தான் எங்களோட்டு!” என மேடையை நோக்கி ஒருவர் முழங்கிய போது, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அதற்கு சிரித்துக் கொண்டே பதில் அளித்துள்ளார்.
மதுரையில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சீமானிடம், “மாற்றுத்திறனாளிகளுக்கு என்ன வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன? நாதக தொடங்கி 16 ஆண்டுகளாகிவிட்டது, இதுவரை என்ன சாதித்துள்ளீர்கள்? பலர் ‘தவெகவுக்கு தான் வாக்கு’ என்கிறார்கள்; அதற்கு நீங்கள் என்ன பதில் சொல்லுவீர்கள்?” என்று ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு சீமான் பதிலளித்தபோது, “அப்படி சொல்பவர்களுக்கு பார்வை இல்லை என்றுதான் சொல்ல முடியும். நடிகனை நேசிக்கிறவன் நமக்கான ஆள் அல்ல; நாட்டை நேசிப்பவனே நமக்கான ஆள்,” என்று தெரிவித்தார்.
அதே நேரத்தில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கான வேலை வாய்ப்புகள் குறித்த கேள்விக்கும் அவர் பதிலளித்தார். “நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்ததும், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், கைம்பெண்கள் ஆகியோருக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்கப்படும். நகருக்குள் சிற்றுந்து சேவை மட்டுமே இயங்கும்; நெடுந்தூர பயணங்களுக்கு பேருந்து வசதி ஏற்படுத்தப்படும். அதில் ஓட்டுநர் மட்டுமே இருப்பார்; நடத்துநர்கள் பேருந்து நிலையங்களில் இருந்து டிக்கெட் வழங்குவார்கள். புதிய நடத்துநர்களாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் நியமிக்கப்படுவார்கள்,” எனவும் அவர் கூறினார்.
நடிகர் விஜய்யை குறித்தும் சீமான் மறைமுகமாக விமர்சித்தார். “நாட்டை நேசிப்பவனே நமக்கான ஆள்,” என்ற அவரது கூற்று, விஜய்யின் அரசியல் நுழைவை நோக்கியதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
















