திருப்பத்தூர் : “2026ம் ஆண்டு மட்டுமல்ல, 2031ம் ஆண்டு, 2036ம் ஆண்டுகளிலும் தி.மு.க-வின் ஆட்சி தொடரும். என்றைக்கும் நாம்தான் ஆட்சி செய்வோம்” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.174.39 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க மற்றும் நிறைவேற்றிய திட்டங்களை திறந்து வைக்க வந்திருந்த முதலமைச்சர், பொதுமக்கள் கூட்டத்தில் உரையாற்றினார்.
“திருப்பத்தூர் மாவட்டம் பல்வேறு சிறப்புகளை கொண்டது. இங்கு தோல் தொழிற்சாலைகள் மூலம் பெரும் அளவில் வருமானம் பெறப்படுகிறது. வேலைவாய்ப்பும் அதிகம். தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இதன் காரணமாகவே மக்கள் தொடர்ந்து தி.மு.க-வுக்கு ஆதரவை காட்டுகிறார்கள்” என்று அவர் கூறினார்.
தமிழகம் 9.69% வளர்ச்சியுடன் முன்னிலையில் :
இந்தியாவின் பிற மாநிலங்களை விட, தமிழகம் தற்போது 9.69% வளர்ச்சியுடன் பொருளாதார முன்னேற்றத்தில் முன்னணியில் உள்ளது. இந்தியாவின் மொத்த வளர்ச்சியில் 100 சதவிகிதத்தில் சுமார் 10 சதவிகிதம் தமிழகம் பங்களிக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.
சமூக வளர்ச்சியில் தமிழக சாதனை :
தமிழகம், சமூக முன்னேற்றத்தில் முதலிடம், உயர் கல்வி சேர்க்கையில் முதலிடம், வறுமையில்லா மாநிலங்களுள் இரண்டாம் இடம், நீடித்த வளர்ச்சியில் மூன்றாம் இடம் ஆகியவற்றில் நிலைபெற்றுள்ளது. பணவீக்கம் குறைந்த மாநிலமாகவும், அதிக நகரமயமடைந்த மாநிலமாகவும் விளங்குகிறது. தலைநகரை மட்டுமன்றி அனைத்து மாவட்டங்களிலும் திட்டங்களை செயல்படுத்துவதில்தான் இந்த முன்னேற்றத்திற்கு அடிப்படை உள்ளது என்றார்.
என்றைக்கும் நம்மாட்சி :
“மக்களின் ஆதரவையும், வரவேற்பையும் பார்த்தபோது, பெருமையுடன் சொல்கிறேன் – 2026ம் ஆண்டு மட்டுமல்ல, 2031, 2036ம் ஆண்டுகளிலும் நாம்தான் ஆட்சி செய்வோம். கடந்த ஆட்சியில் சீரழிந்த தமிழகத்தை கடந்த 4 ஆண்டுகளில் மீட்டெடுத்திருக்கிறோம்” என்றார்.
மத்திய அரசின் ஒடுக்குமுறை :
மத்திய அரசால் தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து ஒதுக்கல் செய்யப்படுகிறபோதிலும், நமது வளர்ச்சியை அவர்கள் மறைக்க முடியவில்லை. நான் கோட்டையில் உட்கார்ந்து மட்டும் ஆட்சி செய்யவில்லை. மாவட்டங்களை தொடர்ந்து நேரில் சென்று, மக்களின் நலனுக்காக செயல்பட்டு வருகிறேன் என்றும் கூறினார்.
பா.ஜ.க., மற்றும் அ.தி.மு.க.,வினர் மக்களின் பிரச்சனைகளைப் பற்றிப் பேசாமல், மத அரசியலில் கவனம் செலுத்துகிறார்கள். தமிழகத்தில் மதத்திற்கு ஆபத்து இல்லை. உண்மையில், பா.ஜ.க., கூட்டணிக்கே தற்போது ஆபத்து உள்ளது என்றார் முதலமைச்சர் ஸ்டாலின்.