நீரஜ் கய்வான் இயக்கத்தில், கரண் ஜோஹர் தயாரிப்பில், இஷான் கட்டர், விஷால் ஜெத்வா மற்றும் ஜான்வி கபூர் நடித்துள்ள திரைப்படம் ‘ஹோம்பவுண்ட்’, இந்தியாவின் அதிகாரப்பூர்வ ஆஸ்கார் பரிந்துரை பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
ஆஸ்கார் அகாடமி, 98வது அகாடமி விருதுகளுக்கான சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவு குறித்த குறுகிய பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் உலகின் பல நாடுகளிலிருந்து தேர்வு செய்யப்பட்ட 15 திரைப்படங்களில் ஒன்றாக இந்தியாவின் ‘ஹோம்பவுண்ட்’ இடம்பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் அர்ஜென்டினா, பிரேசில், பிரான்ஸ், ஜெர்மனி, ஈராக், ஜப்பான், ஜோர்டான், நார்வே, பாலஸ்தீனம், தென் கொரியா, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, தைவான் மற்றும் துனிசியா ஆகிய நாடுகளின் திரைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த 15 படங்களில் இருந்து ஐந்து படங்கள் மட்டுமே இறுதி பரிந்துரைகளுக்கு தேர்வு செய்யப்படும். அதற்கான அறிவிப்பு ஜனவரி 22 அன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சாதனை குறித்து தயாரிப்பாளர் கரண் ஜோஹர் மகிழ்ச்சி தெரிவித்து, “உலகம் முழுவதிலிருந்தும் கிடைத்த ஆதரவு எங்களை உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது. ‘ஹோம்பவுண்ட்’ இந்த அளவிலான அங்கீகாரத்தைப் பெறுவது எங்களுக்கு பெருமை தரும் தருணம்” என கூறியுள்ளார். படத்தின் இயக்குநர் நீரஜ் கய்வானும் இந்த தேர்வால் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
‘ஹோம்பவுண்ட்’, போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்ற கனவுடன் வாழும் இரண்டு பால்ய நண்பர்களின் வாழ்க்கைப் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படமாகும். இதற்கு முன்பு இப்படம் கேன்ஸ் திரைப்பட விழா மற்றும் டொராண்டோ சர்வதேச திரைப்பட விழா ஆகியவற்றிலும் திரையிடப்பட்டு கவனம் பெற்றது.
இந்த நிலையில், இந்திய சினிமாவிற்கு மேலும் ஒரு முக்கியமான உலகளாவிய அங்கீகாரமாக ‘ஹோம்பவுண்ட்’ பார்க்கப்படுகிறது.

















