முன்னாள் மனைவிக்கும் மகளுக்கும் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க உத்தரவு:

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய பந்து வீச்சாளரான முகமது ஷமி, தனது முன்னாள் மனைவி ஹசின் ஜஹானுக்கு மாதம் ரூ.4 லட்சம் பராமரிப்பு தொகையாக வழங்க கோல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த தொகையில், ஹசின் ஜஹானுக்கு மாதம் ரூ.1.5 லட்சமும், தங்களது மகளுக்கு ரூ.2.5 லட்சமும் வழங்குமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஷமியின் வருமானம், மகளின் எதிர்கால தேவைகள் மற்றும் ஹசின் ஜஹான் விவாகரத்திற்கு முந்தைய வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்த உத்தரவை தொடர்ந்து, ஹசின் ஜஹான் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். “கடந்த ஏழு ஆண்டுகளாக என் உரிமைக்காக போராடி பலத்த இழப்புகளை சந்தித்தேன். எனது மகளை நல்ல பள்ளியில் சேர்க்க முடியாமை மிகுந்த வேதனையைக் கொடுத்தது. எனக்கு நீதி வழங்கிய நீதிமன்றத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்,” எனத் தெரிவித்தார்.

முகமது ஷமி மற்றும் ஹசின் ஜஹான் திருமணம் 2014 ஏப்ரல் மாதம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு சில வருடங்களில், ஹசின் ஜஹான் ஷமி மீது குடும்ப வன்முறை, வரதட்சணைத் தொல்லை மற்றும் மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டுகளை விதித்து புகார் அளித்தார். இதையடுத்து இருவரும் விவாகரத்து பெற்றனர்.

முன்னதாக, அலிபூர் நீதிமன்றம் ஹசின் ஜஹானுக்கு ரூ.50,000 மற்றும் மகளுக்கு ரூ.80,000 மாத பராமரிப்பு தொகையாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இந்த தொகை போதாது எனக் கூறி, ரூ.10 லட்சம் பராமரிப்பு தொகை கேட்டு ஹசின் ஜஹான் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.

இப்போது, உயர்நீதிமன்றம் இந்நிலை பரிசீலனையின் பிறகு மாதம் ரூ.4 லட்சம் வழங்கும் உத்தரவை பிறப்பித்துள்ளது.

Exit mobile version