தமிழக முதல்வர் ஸ்டாலின், மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறுபவர்களை இனி “நோயாளி” என்று அழைக்காமல், “மருத்துவப் பயனாளர்” என குறிப்பிட உத்தரவிட்டுள்ளார். இதற்கான அரசாணை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
மருத்துவம் ஒரு மனிதநேயம் மிக்க சேவையாக இருப்பதால், “நோயாளி” என்ற சொல்லுக்கு பதிலாக “பயனாளி” என மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படும்.
முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் மாதம் தொடங்கிய ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் முக்கிய அம்சமாக இது குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் கூறியதாவது, மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்கள் மாவட்டங்களில் முகாம்களை நடத்தி, பொதுமக்களுக்கு மருத்துவ சேவைகளை நேரடியாக வழங்குவார்கள்.
இந்தத் திட்டத்தின் கீழ் 1,256 மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளன. சிறப்பு மருத்துவ வசதிகள் குறைவாக உள்ள ஊரகப் பகுதிகள், குடிசைப் பகுதிகள் மற்றும் பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகள் முன்னுரிமையாக தேர்வு செய்யப்படுகின்றன. ஒவ்வொரு முகாமிலும் மருத்துவர்கள் மற்றும் 200 மருத்துவப் பணியாளர்கள் செயல்படுவார்கள். பயனாளிகளின் ரத்த மாதிரிகள் சேகரித்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். இதனுடன் இசிஜி, காசநோய், தொழுநோய், கருப்பைவாய் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் போன்ற பரிசோதனைகளும் செய்யப்படுகின்றன.
முதல்வர் ஸ்டாலின், மருத்துவர்களையும், மருத்துவப் பணியாளர்களையும் பயனாளிகளுக்கு குடும்பத்தாரைப் பார்த்து பரிவுடன் சேவை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். முகாம்களில் பரிசோதிக்கப்பட்ட மருத்துவத் தகவல்கள் ஒரு கோப்பாக வழங்கப்பட்டு, எதிர்காலத்தில் எந்த மருத்துவமனையிலும் பயன்படுத்தப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.