அதிமுகவில் இருந்து பொறுப்புகள் நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு, ஓ. பன்னீர்செல்வம் தொலைபேசியில் ஆதரவு தெரிவித்துள்ளார்.
நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில், செங்கோட்டையன் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் மற்றும் அமைப்பு செயலாளர் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார். அவருடன் இணைந்திருந்த பலரும் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து செங்கோட்டையன், “அதிமுகவில் கருத்து சொல்ல சுதந்திரம் உண்டு என கூறியவர், இப்போது என்னை பொறுப்பிலிருந்து நீக்கியிருப்பது காலத்தால் விளக்கப்படும். என்னை நீக்கும் முன்பு விளக்கம் கேட்டிருக்க வேண்டும். நான் சொன்னபடி என் பணி தொடரும்” என்று வலியுறுத்தினார்.
இந்நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஈரோட்டில் செங்கோட்டையனை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இன்று நீலகிரி மாவட்ட ஓபிஎஸ் அணியினரும் செங்கோட்டையனைச் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்தினர்.
முக்கியமாக, செங்கோட்டையனைச் சந்திக்க வந்த நிர்வாகியொருவரின் செல்போன் மூலம், ஓ. பன்னீர்செல்வம் நேரடியாக தொடர்பு கொண்டார். பின்னர் அந்தப் போனுடன் தனி அறைக்குச் சென்ற செங்கோட்டையன், சுமார் 5 நிமிடங்கள் ஓபிஎஸுடன் பேசியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
ஓபிஎஸ், முன்னதாகவே செங்கோட்டையனின் நீக்கத்தை எதிர்த்து, “எம்ஜிஆர் காலம் முதல் அதிமுகவுக்கு சேவை செய்து வரும் செங்கோட்டையனின் பங்களிப்பு அளப்பரியது. கட்சியில் பிளவு இல்லாமல் அனைவரையும் ஒருங்கிணைக்கவே அவர் நினைக்கிறார். அதுவே ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் நிறுவும் வழி” எனக் கூறியிருந்தார்.
செங்கோட்டையனின் சமீபத்திய கருத்துகள், ஓபிஎஸ் வலியுறுத்தும் “ஒருங்கிணைப்பு” நோக்கத்துக்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளதால், அதிமுக உள்கட்டமைப்பில் புதிய அரசியல் பரபரப்பு நிலவுகிறது.
















