ராமநாதபுரம்: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை இன்று அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இதில் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், முதல்வர் மு.க. ஸ்டாலின், பல்வேறு கட்சி தலைவர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் மூவரும் ஒன்றாக பசும்பொன் நினைவிடத்துக்கு சென்று தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் மூவரும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:
“அ.தி.மு.க.வில் பிரிந்திருக்கும் சக்திகள் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைந்து, மீண்டும் தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சியை அமைப்பதே எங்கள் இலக்கு. முத்துராமலிங்க தேவரின் சன்னதியில் இதற்கான சபதம் எடுத்துள்ளோம். தி.மு.க. ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர ஒருங்கிணைந்த முயற்சி நடைபெறும்,” என்றார்.
அடுத்து, அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியதாவது :
“முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, ஆட்சியிலோ எதிர்க்கட்சியிலோ இருந்தபோதும் தேவருக்கு மரியாதை செலுத்தி வந்தார். அப்போது அவருக்கு பாதுகாப்பாக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் செங்கோட்டையன். இன்று அதே உணர்வோடு நாங்கள் மூவரும் ஒன்றாக இருக்கிறோம்.
ஜெயலலிதாவின் தொண்டர்களை ஒன்றிணைத்து, துரோகத்தை வீழ்த்தி, மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியை அமைப்பதே எங்கள் நோக்கம். அ.ம.மு.க.க்கு அ.தி.மு.க. எதிரி அல்ல; எடப்பாடி பழனிசாமியும் தி.மு.க.வுமே எங்கள் எதிரிகள்.
சசிகலா இங்கு வருவதில் சிறிய தாமதம் ஏற்பட்டதால் பங்கேற்க முடியவில்லை. ஆனால், அவர் மனதார எங்களோடு இருக்கிறார்,” என தினகரன் தெரிவித்துள்ளார்.
இதனால், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஓ.பி.எஸ்., செங்கோட்டையன் மற்றும் டிடிவி தினகரன் ஒரே மேடையில் தோன்றி, அ.தி.மு.க. ஒருமைப்பாட்டுக்கான புதிய அரசியல் அலை எழுந்துள்ளது.
