மீண்டும் பாஜ கூட்டணிக்கு செல்ல வாய்ப்பு குறித்து ஓபிஎஸ் பதில்

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் விரைவில் சசிகலா மற்றும் டிடிவி தினகரனை சந்திக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அண்ணாதுரையின் பிறந்த நாளையொட்டி, சென்னை அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
“முப்பது ஆண்டுகளாக ஆட்சிப் பொறுப்பு பெற்ற எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் மக்கள் நலனுக்குத் தேவையான அனைத்தையும் தமிழக அரசின் சொந்த வருவாயிலேயே செய்து காட்டினர். அந்த சாதனை மீண்டும் நிகழ வேண்டும் எனில், இன்று பிரிந்து கிடக்கும் அதிமுக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். தொண்டர்கள் உணர்வுகளை மதித்து அதிமுக மீண்டும் ஒருங்கிணைய வேண்டும் என்பதே எங்கள் சபதம்,” என்றார்.

அதிமுகவில் ஒன்றிணைவு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “எம்ஜிஆர் வகுத்த விதிகள் தான் நல்ல வழி. சாதாரண தொண்டனும் பொதுச்செயலாளராகலாம் என்ற சட்டவிதி இருந்தது. ஆனால் இன்று அது புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அது எங்கள் நம்பிக்கைக்கு ஏற்ப முடியும். அதன் அடிப்படையில் கட்சி ஒன்றிணையும். தலைவர்கள் இணையாவிட்டால் கூட, தொண்டர்கள் இணைந்து கட்சியை காப்பாற்றுவார்கள்,” என அவர் தெரிவித்தார். மேலும், “சசிகலா, தினகரன் உள்ளிட்டோரை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. நயினார் நாகேந்திரனையும் விரைவில் சந்திக்க உள்ளேன்,” என்றார்.

மீண்டும் பாஜ கூட்டணியில் சேர வாய்ப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “அரசியலில் நிரந்தர நண்பனோ, எதிரியோ இல்லை. எதுவும் நடக்கலாம்,” என ஓபிஎஸ் பதிலளித்தார்.

இதேபோல், விஜய் திருச்சியில் எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை செலுத்தி பிரசாரத்தைத் தொடங்கியதைப் பற்றிய கேள்விக்கு, “அரசியலுக்கு வருவோரும், வரப்போகிறவர்களும் எம்ஜிஆர்–ஜெயலலிதாவின் தாரக மந்திரத்தை முன்னிறுத்தியே பேச வேண்டும். அப்போது தான் வெற்றி பெற முடியும்,” என கூறினார்.

டிடிவி தினகரன் கூறியுள்ள “முதல்வர் வேட்பாளர் பதவியில் இருந்து இபிஎஸை மாற்றினால் தான் கூட்டணி” என்ற நிபந்தனை குறித்து கேட்கப்பட்டபோது, “பொதுச்செயலாளர் பதவி உள்பட, கட்சித் தலைவர்கள் வகுத்த சட்டவிதிகள் மாற்றமின்றி நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. அது நடந்தால் எல்லாம் சாத்தியமாகும்,” என்று ஓபிஎஸ் தெரிவித்தார்.

Exit mobile version