ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இருவரும் தே.ஜ. கூட்டணியில் தொடர்கிறார்கள் : நயினார் நாகேந்திரன்

சென்னை: “ஓ.பி.எஸ்., மற்றும் இ.பி.எஸ்., இருவரும் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்கிறார்கள்,” என தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :
“தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும். வேட்பாளர்கள் தேர்வுக்கான முடிவுகளை ஒவ்வொரு கட்சித் தலைவர் தனியாக எடுக்கலாம். இது அவரவர் கட்சியின் நிலைப்பாடு. ஆனால், தமிழ்நாட்டில் தற்போது மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த ஆட்சியை அகற்ற அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். மக்களுக்காக அனைவரும் ஒரே அணியாக செயல்பட வேண்டியது அவசியம்,” என்றார்.

ஓ.பி.எஸ்., கருத்துக்கு பதிலளிப்பு

சென்னை வந்த அமித் ஷா, தன்னை சந்திக்காமல் சென்றதாக ஓ.பி.எஸ்., வருத்தம் தெரிவித்திருந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது,
“அமித் ஷா வேறு காரணமாக தமிழ்நாட்டுக்கு வந்திருந்தார். ஏற்கனவே ஓ.பி.எஸ்., எங்கள் கூட்டணியில் உள்ளவராக இருப்பதால், தனியாக சந்திக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. இ.பி.எஸ்., மற்றும் ஓ.பி.எஸ்., இருவரும் தே.ஜ. கூட்டணியில் உள்ளனர்,” என்றார் நயினார்.

முக.ஸ்டாலின் கருத்துக்கு பதில்

2031 மற்றும் 2036-ல் திமுக தான் ஆட்சி அமைக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதையும் கேள்வியாக எழுப்பினர். அதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன்,
“சொல்வதற்கெல்லாம் சுதந்திரம் இருக்கிறது. ஆனால், எந்தக் கட்சி ஆட்சி அமைக்கிறது என்பதை முடிவு செய்யும் அதிகாரம் மக்களுக்கு தான். இதைத்தான் எம்.ஜி.ஆர்., தனது காலத்திலேயே கூறியிருந்தார்,” என தெரிவித்துள்ளார்.

Exit mobile version