மதிமுக கட்சியின் துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யாவை “துரோகி” என பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சுமத்தியதைக் தொடர்ந்து, கட்சியினுள் பெரிய பிளவு ஏற்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பாக, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட மதிமுக உறுப்பினர்கள் கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளனர்.
மூன்று தலைமுறைகளாக மதிமுகவில் உள்ளார் என சொல்லப்படும் மல்லை சத்யா, கடந்த 32 ஆண்டுகளாக வைகோவுடன் இணைந்து போராட்டங்களில் கலந்துகொண்டவர். இந்நிலையில், சமீபத்தில் வைகோ அளித்த பேட்டியில், “போராட்டங்களில் பங்கேற்றதற்காக அவர் துரோகம் செய்யவில்லை என்று சொல்ல முடியாது” என தெரிவித்திருந்தது, கட்சிக்குள் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இதற்கு பதிலளித்த மல்லை சத்யா, “வைகோவின் உயிரை 3 முறை காப்பாற்றிய நான், இன்று அவரது வாரிசுக்காக ‘துரோகி’ பட்டம் ஏற்க வேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளேன்” எனக் கூறியிருந்தார். மேலும், குடும்ப அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கிய வைகோ, இப்போது துரை வைகோவுக்காக தன்னை துரோகியாக கூறுகிறார் எனக் கூறி வருத்தம் தெரிவித்திருந்தார்.
புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் மல்லை சத்யா உருக்கமாகக் கண்கலங்கினார். விரைவில் புதிய கட்சி தொடங்கவுள்ளதாகவும், அது திராவிடக் கொள்கை அடிப்படையில் தமிழர் உரிமைக்குரல் கொடுக்கும் இயக்கமாக அமையும் என்றும், அண்ணாவின் பிறந்த நாள் தினமான செப்டம்பர் 15-ல் அறிவிப்பு வரும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், மாமல்லபுரம் நகர மதிமுக நகரச் செயலாளர் பாபுவின் ஏற்பாட்டில், வைகோவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து, பல மதிமுகவினர் தங்களது வாகனங்களில் இருந்த கட்சிக் கொடிகளை அகற்றி, விட்டு எறிந்து கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்தனர்.
“மல்லை சத்யா தான் மதிமுகவின் அடையாளம். அவரை மாத்தையாவோடு ஒப்பிட்டு விமர்சித்தது வைகோவின் தவறு. தன்னை வாரிசாக்கும் நோக்கத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என அவர்கள் குற்றம்சாட்டினர்.
மாமல்லபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பலர் இவ்வாறு மதிமுகவிலிருந்து விலகினர். இது கட்சிக்குள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி, இனி ஏற்படவுள்ள அரசியல் முன்னேற்றங்களை வலியுறுத்துகிறது.