தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி, பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் இணையும் நிர்வாகிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் ஈரோடு மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் நேற்று அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
தமிழகத்தில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக தனது தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக, கொங்கு மண்டலம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மாற்றுக்கட்சியினரை அதிமுக பக்கம் ஈர்க்கும் முயற்சிகள் வேகம் பெற்றுள்ளன. நேற்று (ஜனவரி 4), சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்குச் சென்ற பல்வேறு கட்சிகளின் மாவட்ட, ஒன்றிய மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், தங்களை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த திமுக முக்கிய நிர்வாகிகள் வி.சி. வரதராஜ் தலைமையில் திரண்டு வந்தனர். இதில் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் உறுப்பினர் வி.பி. முத்துசாமி, திமுக மாவட்ட தொண்டர் அணி இணைச் செயலாளர் முத்துலட்சுமி, ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் சஞ்சீவ்குமார் உள்ளிட்ட திமுகவின் அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் என மொத்தம் 392 பேர் அதிமுகவில் இணைந்தனர். ஆளுங்கட்சியான திமுகவின் கோட்டையாகக் கருதப்படும் பகுதிகளில் இருந்து இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் நிர்வாகிகள் வெளியேறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியைச் சேர்ந்த மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் திவாகர் தலைமையில் 21 பேரும், அமமுக சத்தியமங்கலம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் அழகேஷ், மாவட்ட அவைத்தலைவர் அப்புசாமி உள்ளிட்ட 15 பேரும் அதிமுகவில் இணைந்தனர். இது தவிர, மதிமுக மாவட்ட அவைத் தலைவர் ஞானசேகரன், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தீபக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடம்பூர் மலை வட்டார கமிட்டி தலைவர் சுப்ரமணியம் மற்றும் தாளவாடி மலை வட்டார கமிட்டி தலைவர் சாமி உள்ளிட்ட இடதுசாரி அமைப்புகளைச் சேர்ந்த 24 முக்கிய நிர்வாகிகளும் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர். இவர்களுடன் 46 இளைஞர்களும் புதியதாகக் கட்சியில் இணைந்தனர்.
மற்றொரு நிகழ்வாக, பெரம்பலூர் மாவட்ட அமமுகவின் முக்கியத் தூண்களாகக் கருதப்பட்ட வேப்பந்தட்டை ஒன்றியச் செயலாளர் தழுதாழை சேகர், மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் பழனிவேலு, வேப்பூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் நாகராஜ் மற்றும் டவுன் பிளானிங் முன்னாள் இணை இயக்குநர் தனராஜ் உள்ளிட்ட நிர்வாகிகளும் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துக் கழகத்தில் இணைந்தனர்.
புதியதாகக் கட்சியில் இணைந்தவர்களை வரவேற்றுப் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக அரசின் மக்கள் விரோதப் போக்காலும், அதிமுகவின் மக்கள் நலத் திட்டங்களாலும் கவரப்பட்டு இளைஞர்களும், நிர்வாகிகளும் பெருமளவில் இணைந்து வருவதாகத் தெரிவித்தார். இந்தக் கட்சிக்காரர்களின் வருகை, வரவிருக்கும் தேர்தலில் அதிமுகவின் வெற்றியை உறுதி செய்யும் ஒரு முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வின் போது அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் உடனிருந்தனர்.

















