மழைக்கால கூட்டத்தொடரின் 2வது நாளான இன்று (ஜூலை 22) எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதையடுத்து, லோக்சபா மற்றும் ராஜ்யசபா இரண்டும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டன. இதனால் பார்லிமென்ட் பணிகள் இரண்டாவது நாளாக முடங்கிய நிலையில் உள்ளன.
மழைக்கால கூட்டத்தொடர் நேற்று (ஜூலை 21) தொடங்கியது. ஆகஸ்ட் 21 வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தொடரில், பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இன்று காலை 11 மணிக்கு லோக்சபா தொடங்கியது. தொடங்கிய உடனே எதிர்க்கட்சித் எம்.பி.க்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் ஓம் பிர்லா பலமுறை எச்சரித்தும், எதிர்க்கட்சியினர் அமளியை தொடர்ந்தனர். இதையடுத்து, அவை பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
அதேநேரம் ராஜ்யசபாவும் கடும் குழப்பத்திற்கு ஆளானது. துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் திடீரென ராஜினாமா செய்துள்ள விவகாரம் குறித்து எதிர்க்கட்சியினர் கேள்விகள் எழுப்பியதாலேயே குழப்பம் ஏற்பட்டது. இதனால், ராஜ்யசபாவும் பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மதியம் மீண்டும் சபைகள் தொடங்கியபோதும், எதிர்க்கட்சிகள் தொடர்ந்தும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், இரு அவைகளும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டன.
இதனால், மழைக்கால கூட்டத்தொடரின் இரண்டாவது நாளாக பார்லிமென்ட் முழுமையாக முடங்கி உள்ளது.