புதுடில்லி : ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை எதிர்த்து விவாதத்தைத் துவக்கிய எதிர்க்கட்சிகள், அதில் தோல்வியடைந்துள்ளனர் என்று பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.
காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து (தொகுதி 370) ரத்து செய்யப்பட்டதற்கான 6ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியினரின் எம்.பி.க்கள் ஒன்று கூடி கூட்டம் நடத்தினர்.
இந்த நிகழ்வில், ஆபரேஷன் சிந்தூர் மற்றும் ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கைகளுக்காக பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு அவருக்கு மாலை அணிவித்து எம்.பி.க்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் பேசுகையில், “எதிர்க்கட்சிகள் அரசியல் சாசனத்தை பற்றிப் பேசுகின்றன. ஆனால், அதையே காஷ்மீரில் அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன,” என பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.
மேலும், “ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்திற்கு எதிர்க்கட்சிகள் முக்கியத்துவம் கொடுத்து, தாங்களே தவறான முடிவை எடுத்துள்ளார்கள். அவர்களே தங்களைத் தோற்கடித்துவிட்டார்கள்,” என மோடி விமர்சித்தார்.