வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டி, தேர்தல் ஆணையத்தை நோக்கி பேரணி சென்ற எதிர்க்கட்சித் எம்.பி.க்கள், போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டதோடு, ராகுல் காந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
லோக்சபா மற்றும் அதன் பின் நடந்த மாநில சட்டசபை தேர்தல்களில் போலி வாக்காளர்கள், போலி முகவரி, ஒரே முகவரியில் அதிக வாக்காளர்கள் உள்ளிட்ட முறைகேடுகள் இடம்பெற்றதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். இதற்கான ஆவணங்களையும் அவர் வெளியிட்டதால், நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விவகாரத்தில் திமுக உள்ளிட்ட ‘இண்டி’ கூட்டணி கட்சிகள் ராகுலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தன. வாக்காளர் பட்டியல் முறைகேட்டைக் கண்டித்து, தேர்தல் ஆணையத்தை நோக்கி பேரணி நடத்த போலீசாரிடம் அனுமதி கோரிய இண்டி கூட்டணி எம்.பி.க்களுக்கு, சட்டம்-ஒழுங்கு காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டது.
அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலும், பாராளுமன்ற வளாகத்திலிருந்து நிர்வாச்சன் சதானில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி ராகுல் காந்தி தலைமையில் சுமார் 25 கட்சிகளைச் சேர்ந்த 300 எம்.பி.க்கள் பேரணியைத் தொடங்கினர். திமுக, சமாஜ்வாதி கட்சி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
போலீசார் பேரணியை தடுத்து நிறுத்தியதால், இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பீஹார் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தடுப்புகளைத் தாண்டி செல்ல முயன்றார்; தமிழக எம்.பி. ஜோதிமணி உள்ளிட்டோர் தடுப்புகள் மீது ஏறி முழக்கமிட்டனர்.
பின்னர், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ராகுல் காந்தி உள்ளிட்ட பல எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டனர். இதனால், தலைநகர் டில்லி பரபரப்பான சூழலுக்குள் தள்ளப்பட்டது.