டெல்லி: மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டங்களுக்கு எதிராக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கிய நிலையில், அதன் 3ஆம் நாள் கூட்டத்திற்கு வந்த எதிர்க்கட்சி எம்பிக்கள் கூட்டாகக் குரல் கொடுத்தனர். 29 தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து, 4 தொழிலாளர் சட்டக் குறியீடுகளாக மாற்றியுள்ள மத்திய அரசின் நடவடிக்கை தொழிலாளர்களுக்கு பாதகமாகும் என அவர்கள் தெரிவித்தனர்.
“கார்பரேட் காட்டு ஆட்சி வேண்டாம்”, “தொழிலாளர்களுக்கு நீதி வேண்டும்” என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பெரும் பதாகைகளை ஏந்தியவாறு, நாடாளுமன்ற வளாகத்தில் அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதிய சட்டங்கள் தனியார் நிறுவனங்களுக்கு அதிக அதிகாரம் அளித்து, தொழிலாளர்களின் உரிமைகளை குறைக்கும் அபாயம் உள்ளதாக எதிர்க்கட்சி எம்பிக்கள் குற்றம் சாட்டினர்.
இதற்கு முன்பும், டெல்லியின் மோசமான காற்று மாசுக்கெதிராக கேஸ் மாஸ்க் அணிந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் புதுமையான முறையில் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்றைய ஆர்ப்பாட்டத்தால், புதிய தொழிலாளர் சட்டங்கள் மீதான விவாதம் மீண்டும் தேசிய அரசியலில் தீவிரமடைந்துள்ளது.
















