“விஜய் வெறுப்பு அரசியல் செய்து வருகிறார். திமுகவுக்கு எதிராக பேசுவது அவரின் அரசியலின் மையமாகி விட்டது. ஆனால், வெறுப்பு அரசியல் மக்களிடம் எடுபடாது” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜிஎஸ்டி தொடர்பான பிரதமர் மோடியின் முடிவால் பொதுமக்களுக்கு பெரிதாக பலன் ஏற்படவில்லை என்றாலும், அது காலம் தாழ்ந்த முடிவு எனவும், விடுதலை சிறுத்தைகள் கட்சி அதனை வரவேற்கிறது என்றும் கூறினார்.
அவர் மேலும் பேசியதாவது:
“விஜய்க்கு அரசியல் பேரணி, பொதுக்கூட்டம் நடத்துவது புதிதாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு 35 வருட அனுபவம் உள்ளது. எந்தக் கட்சிக்கும் அரசு விதிக்கும் கட்டுப்பாடுகள் அவருக்கும் விதிக்கப்படும். அவருக்கு அரசு அல்லது போலீசாரிடமிருந்து சிறப்பு நெருக்கடி இல்லை. அவர் சுதந்திரமாக பேசுகிறார். ஆனால் அவர் அரசியலில் முன்வைப்பது ‘திமுக எதிர்ப்பு’ அல்ல, ‘திமுக வெறுப்பு’ தான்.
எதிர்ப்பு அரசியலும் வெறுப்பு அரசியலும் இரண்டும் வேறு. திமுக அரசுக்கு எதிராக மட்டும் கருத்து கூறுவது மக்கள் செல்வாக்கைப் பெறாது. அவர் தன்னுடைய செயல் திட்டங்களை தெளிவாக முன்வைக்காமல், வெறுப்பை மட்டுமே அரசியலாக எடுத்துச் செல்கிறார். அது மக்களிடம் நீண்ட நாள் நிலைக்காது” என்றார்.
அதிமுக குறித்து கருத்து தெரிவித்த திருமாவளவன், “அதிமுக ஒரு பெரிய திராவிட இயக்கம். ஈ.வெ.ரா, அண்ணாதுரை கொள்கைகளை பின்பற்றிய இயக்கமாக அது வளர்ந்தது. ஆனால் இப்போது சங்கப் பரிவாரத்தின் பாதையில் செல்லுமோ என்ற அச்சம் அதிமுக தலைவர்களின் போக்கால் எழுந்துள்ளது. இது அனைவருக்கும் கவலை அளிக்கிறது” என்று தெரிவித்தார்.